Header Ads

test

வனவாழ் உயிரினங்கள் திணைக்களத்துக்கு ஆயுதம்?

வடகிழக்கில் தமிழர் தாயகத்தில் நில ஆக்கிரமிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ள சிறிலங்காவின் வனவாழ் உயிரினங்கள் திணைக்களத்துக்கு 42 மில்லியன் ரூபா செலவில் 2568 ஏ.கே-47 துப்பாக்கிகளை கொள்வனவு செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

யானைகள் கொல்லப்படுவதில் இருந்து பாதுகாப்பதற்கும், மனிதர்கள்- யானைகள் இடையிலான மோதல்களில் இருந்து மனிதர்களை பாதுகாப்பதற்கும் என்றே இந்த துப்பாக்கிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அரசு விளக்கமளித்துள்ளது.
வனவாழ் உயிரினங்கள் அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.

சீனத் தயாரிப்பான ரி-56 ரகத் துப்பாக்கிகளை விட, ரஸ்யத் தயாரிப்பாக ஏ.கே.47 துப்பாக்கிகள் தரமானவை என்று பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா பரிந்துரைத்துள்ளார். இதற்கமைய, 2,568 ஏ.கே.47 துப்பாக்கிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
இந்த ஆண்டில்,  தலா 16 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில், 1500 துப்பாக்கிகள் 24 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும். அடுத்த ஆண்டு 1068 துப்பாக்கிகள், தலா 17 ஆயிரம் ரூபா வீதம், 18 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும்.

இவற்றில், , 2,334 துப்பாக்கிகள், வன உயிரியல் பூங்காக்களில் உள்ள சிறிய பராமரிப்புக் குழுக்களுக்கு வழங்கப்படும். 234 துப்பாக்கிகள், உதவி வனத்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில், வன உயிரியல் திணைக்கள அதிகாரிகள், தமிழ் மக்களின் பாரம்பரிய இடங்களை அபகரிப்பதாகவும், அங்கு வாழும் மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், வன வாழ் உயிரினங்கள் திணைக்கள அதிகாரிகளுக்கு துப்பாக்கிகள் வழங்கப்படுவது, தமிழ் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments