Header Ads

test

எங்கள் உணர்வுகளுக்கு வட மாகாண சபை மதிப்பளிக்கவில்லை

வடக்கில் பாரம்பரியமாக உள்ள சாதி அமைப்புக்குப் புறம்பாக புதியதொரு உயர்சாதி அமைப்பொன்று உருவாகியுள்ளது போல உள்ளது. அரசியல்வாதிகள் என்னதான் தங்களுக்குள் அடித்துக் கொண்டாலும் ஒருவர் தவறு செய்தால் மற்றவர் அதனை நியாயப்படுத்தும் அல்லது பூசிமெழுகும் போக்கு வெளிப்படுகிறது என்று கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வழங்கிய 7 ஆயிரம் ரூபாய் பணத்தை வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா திருப்பிக் கேட்டதால் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அந்தப் பணத்தை ஒரு ரூபாவாக 7 ஆயிரம் பேரிடம் சேர்த்து இன்றைய (12) தினம் இடம்பெற்ற வடமாகாண சபை அமர்வில் கொடுப்பதற்காக வந்திருந்தனர். அங்கு அதை வாங்க மறுத்ததால் மாணவர்கள் தவராசாவின் வீட்டுக்கு கொண்டு சென்று அங்கு எவரும் இல்லாத நிலையில் வீட்டு வாசல் கதவில் கட்டிவிட்டு சென்றனர். இதன் பின் வெளிடப்பட்ட அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது.

திரு.தவராசா மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் தன்னிடம் அறவிடப்பட்ட மே18 ஆம் நாளுக்கான நிதியைத் திருப்பித் தருமாறு கோரியிருந்தார். இவரது கட்சி யாழ்.மாநகர சபையை ஆட்சி புரிந்த போது முள்ளிவாய்க்கால் உட்பட இறுதிப் போரில் கொல்லப்பட்ட பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அங்கு கொல்லப்பட்ட அனைவரும் புலிகளே என்ற நிலைப்பாட்டிலிருந்த திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அத் தீர்மானத்துக்கு அனுமதி மறுத்தார். அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக அக்கட்சியின் செயலர் ஜெனிவா வரை சென்றார். இனப்படுகொலை என்ற ஜ.நாவின் குற்றச்சாட்டை மறுதலித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்களையும் அக்கட்சி ஏற்பாடு செய்தது. இதன் தொடர்ச்சியாகவே தவராசா தனது பங்கு நிதியைத் திருப்பிக் கேட்டார். தனது தவறை அவர் உணரவும் இல்லை. நியாயப்படுத்தும் விதமாகவே அவரது நிலைப்பாடு உள்ளது. அவரைக் காப்பாற்ற கட்சிபேதமின்றி அரசியல்வாதிகள் செயற்படுகிறார்கள் போல உள்ளது.

பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் மக்களின் உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் மனதிலுள்ள வடுக்களைக் கீறிப்பார்க்க முயலக்கூடாது. செருப்புத்தைப்பவர் சந்தைவணிகர் பிரயாணிகள் பல்கலைக்கழக சமூகத்தினர் முஸ்லிம் பொது மக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இந் நிதி சேகரிப்பின் போது பங்களித்திருந்தனர். இந்தக் காசைத் திருப்பிக் கொடுப்பதற்காகத் தைத்துத் தந்த பைக்குக் கூட அந்தத் தொழிலாளி காசு வாங்கவில்லை.

கிழக்கு மக்களின் உணர்வுகளுக்கு வடமாகாண சபையினர் மதிப்பளிக்காதமை வருத்தமளிக்கிறது. வட.கிழக்கு இணைப்பை எதிர்க்கும் சக்திகளின் கரம் மேலோங்கும் அபாயத்தை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை. கிழக்கிலிருந்து வருகை தந்து மே18 அன்று வடகிழக்கு பேதங்களை ஏற்படுத்த சில சக்திகள் தீவிரமாக முயன்றன. அன்று அவர்களால் சாதிக்க முடியாமற் போனதை இன்று வடமாகாண சபையினர் செயற்படுத்தியுள்ளனர் என்பது வருத்தமளிக்கிறது. இந்த வரலாற்றுப் பழியை சம்பந்தப்பட்டோரே பொறுப்பேற்க வேண்டும். மே18 தொடர்பான உத்தேச நினைவேந்தல் குழு எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாமற் போய் விடுமோ என அஞ்சுகிறோம். அம்பாறை உட்பட வடகிழக்கின் எட்டு மாவட்ட மக்களும் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தனர் என்ற உண்மையை சம்பந்தப்பட்டவர்களுக்கு நினைவூட்டுகிறோம்.

குறிப்பிட்ட சில வணிக நிறுவனங்களைத் தவிர எமது நிதி சேகரிப்பின் போது ஆதரவளித்த பலரையும் எமக்குத் தெரியாது. ஆகவே ஒவ்வொரு ரூபாவாகக் கொடுப்பது சாத்தியமில்லை. எனவே எந்த வழியிலாவது தவராசாவின் பணத்தை மீளக் கையளிக்க வேண்டி ஏற்பட்டது என்றுள்ளது.

No comments