மாவீரர்களிற்கு செய்யும் துரோகம்!
கிளிநொச்சியில் இராணுவ அதிகாரிக்கு முன்னாள் போராளிகள் வழங்கிய பிரிவுபசார நிகழ்வானது புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று வெடித்துச் சிதறி வீரச்சாவடைந்த 50 ஆயிரம் போராளிகளுக்கும் செய்யும் துரோகம். என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நண்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
சிவில் பாதுகாப்புப் படையில் இருந்தவர்கள் இராணுவ அதிகாரிக்கு நடத்திய பிரிவுபசார நிகழ்வு தமிழ் மக்களின் சபல புத்தியை வெளிப்படுத்தி நிற்கின்றது. சாதாரண கிராம மக்கள் இவ்வாறான நிகழ்வினை செய்திருந்தால் ஒரளவுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்று வெடித்துச் சிதறி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 50 ஆயிரம் மாவீர்களுக்கு அவர்களோடு இணைந்து போராடிய முன்னாள் போராளிகள் செய்கின்ற துரோகமாகத்தான் நான் இதைக் கருதுகின்றேன்.இந்த நிகழ்வானது ஒட்டுமொத்த இராணுவ பிரசன்னத்தை நியாயப்படுத்துகின்ற பாரிய பிரச்சினைக்கு இட்டுச் செல்லும்.
ஒரு தனி மனிதன் நல்லவராக இருக்கலாம். அவர் தளபதியாக இருக்கலாம், பிராந்திய தளபதியாக இருக்கலாம். அது வேறு விடயம். ஆனால் அதனை பொது விடயத்துடன் ஒப்பிட்டு பொது மக்கள் திரண்டு பெரிய விழாவாக எடுத்து, தோழில் சுமந்து செல்வது என்பது எமது அடிமை புத்தியைத்தான் காட்டி நிற்கின்றது. என்று தணியும் இந்த சுதந்திர தாகம். என்று மடியும் இந்த அடிமையின் மோகம் என்றுதான் கூற முடியும் என்றார்.
Post a Comment