அவுஸ்ரேலியா, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற போது எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றில் வைத்து மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 131 இலங்கையர்கள் தொடர்பாகவும், கோலாலம்பூரில் உள்ள சிறிலங்கா தூதரகம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பாக சிறிலங்கா தூதரகம், மலேசிய அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன், இணைந்து பணியாற்றி வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை, கைது செய்யப்பட்ட 131 இலங்கையர்களும், ஜோஹோர் பாரு மாகாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று மலேசிய காவல்துறையின் சிறப்பு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட 131 இலங்கையர்களில், 127 பேர், 1959/63 குடிவரவுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஜோஹோர் பாரு மாகாணத்தில் உள்ள பீகன் நேனாஸ் குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஏனைய நான்கு இலங்கையர்கள், 2007ஆம் ஆண்டின் ஆட்களைக் கடத்துவதற்கு எதிரான, மற்றும் குடியேற்றவாசிகள் கடத்தலுக்கு எதிரான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கைது செய்யப்பட்ட இலங்கையர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கைது செய்யப்பட்ட 131 பேரில், 43 பேரிடம், அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment