Header Ads

test

இலங்கைத் தேர்தல் யூன் 20ம் திகதி நடைபெறும் ஆனால் நடைபெறாது! பனங்காட்டான்


மனித மரணம் மலிவாகி விட்ட காலமிது. நித்தம் நித்தம் கொத்துக் கொத்தாக மக்கள் மரணிக்கின்றனர். இன்றைய ஸ்கோர் என்ன
என்றவாறு மரணத்தொகை எண்ணப்படுகிறது. இதற்குள் கொரோனா பெயரில் அரசியலும் நடைபெறுகிறது. இதில் இலங்கையும் அடக்கம். கோதபாயவுக்கான வரம்பு மீறிய அதிகாரம் தேர்தலை நடத்துமா என்று கேட்கத் தோன்றுகிறது. தேர்தல் ஆணையகம் யூன் 20ல் தேர்தல் நடைபெறுமென்று முதலில் கூறியது. பின்னர் நடைபெறாது என்கிறது. எது நடைபெறும்?


இந்த வருடம் பெப்ரவரி மாத முதல் வாரத்தில் கொரோனா என்ற பெயரோ அல்லது கோவிட் - 19 என்ற பெயரோ எங்கும் அடிபடவில்லை. இந்தப் பெயர்களை அப்போது எவரும் கேள்விப்பட்டதாகவும் இல்லை.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பெப்ரவரி மாதம் 6ம் திகதி நல்ல ஆரோக்கியமான, திடகாத்திரமான, தினசரி உடற்பயிற்சி செய்துவந்த, எந்த நோயுமற்ற, மருந்து எதுவும் பாவிக்காத 57 வயது பெண்மணி ஒருவர் திடீரென காலமானார். சில நாட்கள் மென்காய்ச்சலால் அவர் பீடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இவரைத் தொடர்ந்து பெப்ரவரி 17ம் திகதியும், மார்ச் மாதம் 6ம் திகதியும் இதே மாநிலத்தில் இருவர் மரணத்தைத் தழுவினர். இருதய நோயினால் இவர்கள் மூவரும் மரணித்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த வாரம் வெளியான உடற்கூற்றுப் பரிசோதனைகள் இவர்களின் இறப்புக்கு கொரோனா நோயே காரணமென உறுதி செய்துள்ளதாக லொஸ் ஏஞ்ஜல்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

கொரோனா என்றால் என்னவென்று உலகம் தெரிந்திராத வேளையில், தங்கள் நகரத்துக்கு வெளியே எங்கும் சென்றிராதவர்கள் என்று கூறப்படும் இம்மூவரதும் மரணம் எடுத்துக்கூறும் செய்தி என்ன?

கொரோனாவின் பிறப்பிடம் சீனா என்றும், திட்டமிட்டு சீனா இதனைப் பரப்பியது என்றும், இதனை விசாரணை செய்ய அமெரிக்க நிபுணர்கள் குழுவை சீனாவுக்குள் அனுமதிக்க வேண்டுமென்றும் (சீனா அனுதியை மறுத்துவிட்டது), இது உண்மையென நிரூபிக்கப்பட்டால் சீனா தண்டனையை அனுபவிக்குமென்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சீனாவை நோக்கி விரல் சுட்டி நிற்பது இந்நோயின் தாக்கத்திலிருந்து உலகை மீட்கவா அல்லது அரசியல் ரீதியாக லாபம் ஈட்டவா என்ற கேள்வியை முன்வைக்கிறது.

இப்பொழுது பொதுமக்கள் முன்னால் இன்னொரு கேள்வி எழுகிறது. கொரோனா கலிபோர்னியாவில் பிறந்ததா! சீனாவின் வுகானில் உதித்ததா?

கொரோனா நோய்ப் பரவல் லட்சோபலட்சம் மக்களை ஆக்கிரமித்துள்ளது. நித்தம் நித்தம் கொத்துக் கொத்தாக மனிதர்கள் மரணித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனைக் கட்டுப்படுத்த மருந்தோ தடுப்பூசியோ கண்டுபிடிக்காத நிலையிலும் இதனை அரசியலாக்க பல நாடுகள் முயன்று வருகின்றன. (தடுப்பூசி பயன்பாட்டுக்கு வராதவரை கொரோனாவைத் தடுக்க முடியாதென்று சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்த கனடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, தற்போதைய கடுமையான நிலையிலிருந்து விடுபட பன்னிரண்டு முதல் பதினெட்டு மாதங்கள்வரை செல்லலாமென்று சொன்னதை அலட்சியம் செய்ய முடியாது.

கொரோனா நோயை அடையாளம் காண்பது, பரிசோதனைக்குட்படுத்துவது, சிகிச்சை அளிப்பது என மருத்துவப் பிரிவினர் பிரித்து வைத்துள்ளனர். அதேசமயம் இந்நோயின் பரவல் இருவகையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. முதலாவது - சமூக நடமாட்டங்களின் சுயகட்டுப்பாட்டுக் குறைவால் ஏற்படுவது. இரண்டாவது - முதியோர்கள் இலகுவாக இதன் வயப்படுவது.

உலகளாவிய ரீதியில் இதுவரை இந்நோயினால் மரணித்தவர்களில் பெரும்பான்மையானோர் முதியோர்கள். இத்தாலியில் முதலாம் தலைமுறை முற்றாகப் பலியாகி விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் உடலங்களை புதைக்கவே இடமில்லாத நிலையேற்பட்டது.

இங்கிலாந்தில் ஏப்ரல் மாத முதல் இரு வாரங்களில் மட்டும் சுமார் 1,500 முதியோர் மரணத்தைத் தழுவியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாமென கூறப்படுகிறது.

கனடாவில் இதுவரை இந்நோயினால் மரணித்தவர்களில் ஐம்பது வீதத்துக்கும் அதிகமானவர்கள் முதியவர்கள் என்று கனடிய பிரதம மருத்துவ அதிகாரி திரேசா ராம் அண்மையில் அறிவித்தார்.

ஒன்ராறியோ மாகாணத்தில் இறந்தவர்களில் சுமார் எண்பது வீதம் வரையானவர்கள் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தங்கியிருந்தவர்கள் என்பது அதிர்ச்சியும் கவலையும் தரும் தகவல்.

கியுபெக் மற்றும் ஒன்ராறியோ மாகாணங்களில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லங்களுக்கு ராணுவத்தின் உதவியை மாகாண முதலமைச்சர்கள் கோரியதால் அந்த உதவியை பிரதமர் ரூடோ உடனடியாக வழங்கியுள்ளார். கனடாவில் பிரதமர் என்பவர் தம் விருப்பப்படி ராணுவத்தை மாகாணங்களுக்கு அனுப்ப முடியாத சட்டமுறைக்கும், ராணுவ உதவியை மாகாண அரசுகள் கேட்காதவிடத்து மத்திய அரசு வழங்க முடியாத சட்டமுறைக்கும் இந்நாட்டின் அரசியல் சட்டமே காரணம்.

எனினும், ரொறன்ரோ நகர முதல்வர் தமது நிர்வாகத்திலுள்ள பத்து முதியோர் பராமரிப்பு இல்லங்களுக்கும் ராணுவ உதவி தேவையில்லையென்று கூறியுள்ளது விசனத்தைத் தருகிறது.

ஒன்ராறியோவில் 132 முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கொரோனா பரவியுள்ளது. இதில் 24 இல்லங்களில் சராசரியாக பத்துக்கும் மேற்பட்டோர் (ஒரு இல்லத்தில் 36 பேர்) இதுவரை மரணித்துள்ளனர். இந்த இல்லங்களில் நோய்வாய்ப்பட்டோரில் மருத்துவ ஊழியர்களும் அடங்குவர்.

கனடாவிலும் ஒருவகை இனவாத அரசியல் இப்போது மெதுவாக ஆரம்பித்துள்ளது. கனடிய பிரதம மருத்துவ அதிகாரி திரேசா ராம் பதவி விலக வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குரலெழுப்பியுள்ளனர்.

திரேசா ராம் கனடாவுக்குப் பணியாற்றுகின்றாரா அல்லது சீனாவுக்காக பணியாற்றுகின்றாரா என்று முதலாவது கல்லை கனடிய கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரெக் சுலோன் வீசியுள்ளார். திரேசா ராம் ஹொங்கொங்கில் பிறந்தவர் என்பதால் இக்குற்றச்சாட்டா?

தற்போது கொரோனா தொற்றாளர் மற்றும் மரணிப்போர் எண்ணிக்கை, இது தொடர்பான நடவடிக்கைகளை இவர் மறைத்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்துடன் சேர்ந்து சீனாவை இவர் காப்பாற்ற முனைவதாக கன்சர்வேடிவ் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுத்து மூலம் கடிதம் சமர்ப்பித்துள்ளனர். ஆனால், இக்கட்சியின் தலைவர் அன்ட்ரூ ~pயர் இவ்விடயத்தில் கருத்து எதுவும் கூறாது அமைதி பேணுகிறார்.

உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் சீனாவுக்குச் சாதகமாக இயங்குவதாக குற்றஞ்சாட்டிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அவர் பதவி விலக வேண்டுமென சில நாட்களுக்கு முன்னர் கோரியதற்கு நிகரானதாக திரேசா ராம் மீதான குற்றச்சாட்டு அமைந்துள்ளது. தொடர்ந்து வரும் மாதங்களில் இதன் அடுத்த கட்டங்கள் தெரியவரும்.

இலங்கையிலும் கொரோனாவுக்குள் அரசியல் நன்றாகப் புகுந்து விளையாடுவது தெரிகிறது.

ஜனாதிபதி பதவி வழியாக தமக்குக் கிடைத்த அதிகாரங்களை பொதுஜன பாதுகாப்பு சட்டங்கள் ஊடாகப் பயன்படுத்தி கோதபாய வரம்பு மீறி செயற்படுவது நன்றாகவே தெரிகிறது.

நாடாளுமன்றம் இயங்காத நிலை, காவற்துறையும் இராணுவமும் கட்டவிழ்த்து விடப்பட்ட சூழல், இராணுவத் தளபதி தலைமையில் இயங்கும் கொரோனா கால செயலணி, நீதிமன்றங்கள் இயக்கமின்றியுள்ள நிகழ்காலம் என எல்லாமே ஒற்றைத் தலைமைக்குச் சாதகமாக உள்ளன.

மார்ச் மாதம் 2ம் திகதி கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்துக்கு யூன் மாதம் 2ம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடைபெறவில்லையானால் நாடாளுமன்றத்தை மீளக்கூட்ட வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் வேண்டி வருகின்றன.

அதனை ஏற்றுக் கொள்வது போன்ற பாணியில் ஊரடங்குச் சட்டத்தைக் கவனத்தில் கொள்ளாது ஏப்ரல் 27ல் தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையகம் அறிவித்தது. தேர்தல் திகதியை தீர்மானிப்பது தேர்தல் ஆணையகமா அல்லது ஜனாதிபதியா என்ற சர்ச்சைகளுக்கு மத்தியில்  ஜனாதிபதி யூன் 2ம் திகதியை அறிவித்தார்.

எதிர்க்கட்சிகள் தற்போதைய நெருக்கடி நிலையைச் சுட்டிக்காட்டி எதிர்ப்புத் தெரிவிக்க, தேர்தல் ஆணையகம் யூன் மாதம் 20ம் திகதி தேர்தல் நடைபெறுமென அறிவித்தது. இந்த அறிவித்தலுக்கு மறுநாள் அரசியல் கட்சிகளோடு உரையாடிய தேர்தல் ஆணையகம் பல ஆட்சேபனைகளை நேரடியாகச் சந்தித்தது.

யூன் 20ம் திகதி தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய நிலைமை தொடருமானால் தேர்தல் திகதி பிற்போடப்படுமென தேர்தல் ஆணையகம் தெரிவித்தது. இந்த முடிவு அரசியல் கட்சிகளுக்கு சற்று ஆறுதல் அளித்ததாயினும், இறுதி முடிவை யார் எப்போது எடுப்பாரென்பது இவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

தற்போது சில மாவட்டங்களில் ஊரடங்கு தொடர்கிறது. எனவே இந்தியாவில் இடம்பெறுவது போன்று வெவ்வேறு தினங்களில் மாவட்ட ரீதியாக தேர்தலை நடத்தக்கூடியதாக ராஜபக்சக்கள் ஆலோசித்து வருகின்றனராம். இப்போது முக்கிய முடிவுகள் ஒரு குசினிக்குள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லாமல் இல்லை.

யூன் 2ம் திகதிக்குள் தேர்தல் நடத்தப்படாவிட்டால் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டுமென சில அரசியலமைப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படிக் கூட்டத் தேவையில்லையென்று மகிந்தவின் பொதுஜன பெரமுனவினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அரசாங்கப் பத்திரிகையான டெய்லி நியூஸ், ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வாவை மேற்கோள்காட்டி பின்வருமாறு தெரிவித்துள்ளது:

'தேர்தலை மூன்று மாதத்துள் நடத்தாவிட்டால் நாடாளுமன்றத்தை மீளக்கூட்ட வேண்டுமென்பதில் உண்மையில்லை. அரசியலமைப்பு 64(2) விதிகளின் கீழ் நாடாளுமன்றத்தை மீளக்கூட்டும் அதிகாரம் ஜனாதிபதியைத் தவிர வேறு எவருக்குமில்லை. தேர்தல் பின்போடப்பட்டதால் நாடாளுமன்றத்தை மீளக்கூட்ட வேண்டுமென்ற கட்டாயம் ஜனாதிபதிக்கு இல்லை" என்பது மனோகர டி சில்வாவின் கருத்து.

தேர்தல் ஆணையகத்தின் முடிவுக்குப் பார்த்திராது தேர்தல் திகதியை நிர்ணயிக்கும் உரிமை ஜனாதிபதிக்கு உண்டு என்ற கோதபாயவின் சிந்தனைக்கு வலுவூட்டுவதாக இவரது கருத்து அமைந்துள்ளது.

யூன் 20ம் திகதி தேர்தல் நடைபெறுமென்று அறிவித்த தேர்தல் ஆணையகம், பின்னர் அந்தத் திகதி நிச்சயமில்லையென்று அறிவித்திருப்பது, தேர்தல் 20க்கு முன்னரா பின்னரா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. அப்படியானால் தேர்தல் திகதியை கோதபாயதான் நிர்ணயிக்கப் போகின்றாரா?

யூன் 20ல் தேர்தல் நடைபெறும் என்பது நடைபெறாது என்ற அர்த்தத்தையும் இப்போது விதைத்துள்ளது.

No comments