Header Ads

test

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க சகல தகுதியும் உள்ளது – சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியின் உயிர்நாடியாக இருக்கும் எனக்கு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்க சகல தகுதியும் உள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவுசெய்யப்பட்டுள்ளார் எனவும் எனினும் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட அவருக்குத் தகுதி இல்லை எனக் கட்சியிலுள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்கள் செல்வாக்கை அதிகம் கொண்டுள்ளவராகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் உயிர்நாடியாகவும் நான் இருக்கின்றேன். ‘2018 ஒக்டோபர் 26’ அரசியல் சதிப் புரட்சியை முறியடித்து எமது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமர் கதிரையில் அமர்த்திய நடவடிக்கையில் எனது முழுமையான பங்கு இருந்தது. இதை பிரதமர் என்றுமே மறக்கமாட்டார்.
அரசியல் சதிப் புரட்சியின்போது ராஜபக்ஷ அணியினர் பல கோடி ரூபாய்க்களுக்கு என்னைப் பேரம் பேசி தமது பக்கம் இழுக்க முயன்றனர். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியில் நான் கொண்டுள்ள உயிர்ப்பற்று காரணமாக நீதியின் வழியில் நடந்தேன். கட்சிக்குத் துரோகமிழைக்காமல் தடம்புரளாமல் நின்றேன்.
இந்தநிலையில், ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க எனக்குத் தகுதி இல்லை என்று சிலர் கூறுகின்றனர். பொறாமை பிடித்தவர்கள்தான் இப்படி என்னை விமர்சிக்கின்றார்கள். இந்த விமர்சனங்களைக் குப்பையில் தூக்கி வீசுங்கள்.
நான் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மகன். ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்க சகல தகுதியும் எனக்கு உள்ளது. தந்தையின் வழியில் பயணிப்பேன். ஏழை மக்களின் கண்ணீரைத் துடைப்பேன். மூவின மக்களையும் அரவணைத்து நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொடுப்பேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.

No comments