Video Of Day

Breaking News

அரசியல்வாதிகள் சந்திக்க வரவேண்டாம்:பேராயர் அறிவிப்பு!

அரசியல்வாதிகள் சந்திக்க வரவேண்டாம் என கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தீர்க்கமான முடிவு ஒன்றை இன்று அறிவித்துள்ளார்.
பேராயர் இல்லத்தில் இன்றைய தினம் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி தனது கடுமையான அதிருப்தியையும் நிலைப்பாட்டையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசாரணைக்காக ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் வரை எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்க மாட்டேன் என தீர்மானித்துள்ளேன்.
உயிர்த்த தினத்தில் தீவிரவாத தாக்குதல் இடம்பெற்று மூன்று மாதங்கள் கடந்திருக்கின்றன. இந்த தற்கொலை குண்டு தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் அவதிப்பட்டு வருகின்றனர். முடிந்தவரை அவர்களுக்கு ஆறுதல் கூற எப்போதும் முயற்சிக்கின்றேன்.
அவர்கள் இழப்பீடுகளை கோரவில்லை. அவர்கள் நீதியை மட்டுமே கோருகின்றனர். ஆனால் பேரழிவை ஏற்படுத்திய தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்தவர்களும், முன்கூட்டியே பெறப்பட்ட உளவுத்துறை தகவல்களை தெரிந்தே புறக்கணித்தவர்களும் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள்.
இந்த விடயத்தில் இன்னும் நீதி வழங்கப்படவில்லை. ஈஸ்டர் ஞாயிறு தாக்கதல் தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்த்தரப்புகள் பொறுப்புக்கூற தவறியுள்ளனர். ஆளும் கட்சி மட்டுமல்ல எதிர்க்கட்சியும் பொறுப்புக் கூறவேண்டும். இதேவேளை பக்கச்சார்பற்ற நபர்களைக் கொண்ட தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் தெரிவுக்குழு இன்னும் பொறுப்பானவர்களுக்கு தண்டனை வழங்கவில்லை.
இந்த விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை காணப்படவில்லை. இதுவரை அமைக்கப்பட்ட ஆணைக்குழு விசாரணையின் அறிக்கைக்கூட இன்னும் வெளியிடப்படவில்லை. விசாரணை நடத்தி குற்றவாளிகளை நிறுத்தி தண்டகைகூட அளிக்கப்படவில்லை. சுயாதீன ஆணைக்குழுவின் சுயாதீனத்துவம்கூட விளக்கவில்லை.
கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் ஆளும், எதிர்தரப்பு மற்றும் வேறு கட்சிகளினால் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு களமிறங்குகின்ற எந்த வேட்பாளர்களையும் நான் சந்திக்கமாட்டேன். அவர்கள் என்னை சந்திக்க வரத்தேவையும் இல்லை” என அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.


No comments