Header Ads

test

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனையை எதிர்கொள்ள தயார் – நாடாளுமன்றில் ரிஷாட்

தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் எனக்கு மரண தண்டனை விதித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கின்றேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தேயிலை சபை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “என்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் எனக்கு மரண தண்டனை விதித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கின்றேன்.
அதற்காக என்னை பழிவாங்குவதாக தெரிவித்து முஸ்லிம் சமுகத்தை பழிவாங்கோ முஸ்லிம்களின் பொருளாதார நிலையங்களை தாக்கவோ வேண்டாம்.
அத்துடன் நாங்கள் யாருக்கும் பயந்து அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யவில்லை. நாட்டுக்காகவே இராஜினாமா செய்தோம். இந்த நாட்டில் சட்டம் இருந்தால் சிங்கள அடிப்படைவாதிகளையும் தடை செய்ய வேண்டும்.
உலக பயங்கரவாதம் இந்த நாட்டில்  புகுந்து இலங்கையிலுள்ள சில முஸ்லிம் இளைஞர்களை அதற்குள் சம்பந்தப்படுத்தி இந்த நாட்டில் நாம் எதிர்பார்க்காத பயங்கரவாதத் தாக்குதலை  நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலுடன் அப்பாவி 22  இலட்சம் முஸ்லிம்களையும் தொடர்புபடுத்தி அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் என்று அழகாக சிங்கள மொழியில் பேசுகின்ற அரசியல்வாதிகள் இந்தப் நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் உருவாகியுள்ளனர்.
முஸ்லிம்களையும் உலமாக்களையும் மிக மோசமான வார்த்தைகளால் பேசுகின்ற செயற்பாட்டினை நாம் பார்க்கின்றோம். அதற்கு சில ஊடகங்களும் துணை போகின்றன. நாடு பாதுகாக்கப்பட வேண்டுமென்ற உணர்வோடுதான் இன்றுவரை முஸ்லிம் சமூகம்  உள்ளது.
ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத செயலை கண்டித்ததோடு மட்டுமல்லாது அந்த செயலோடு சம்பந்தப்பட்டவர்கள் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சொந்தங்களாக, நண்பர்களாக இரத்த உறவுகளாக இருந்தாலும்கூட அவர்களைக் காட்டிக்கொடுக்கும் பணியை முஸ்லிம் சமூகம் செய்துள்ளது” என அவர் தெரிவித்தார்.

No comments