வடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுக்க அங்கீகாரம்
வடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுப்பதற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முழு அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தின் கல்வி, கலாசார, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் இருந்து கல்வி அமைச்சை தனி அலகாக்கி வடக்கு மாகாணத்தின் கல்வியை மேம்படுத்த வேண்டுமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வடக்கு மாகாணத்தின் ஆளுநர் சுரேன் ராகவனிடம் முன்வைத்த கோரிக்கையை மத்திய கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆராய்த்து அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்.
வடக்கு மாகாண கல்வியில் ஏற்பட்ட பின்னடைவுகள் அதற்கான காரணங்களை விளக்கி அண்மையில் வடக்கு மாகாணத்தின் ஆளுநர் சுரேன் ராகவனுடன் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்கள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.
அதில் முக்கியமாக வடக்கு மாகாணத்திற்கு தனியான கல்வி அமைச்சு வேண்டுமென்ற கோரிக்கையை எழுத்து மூலமாக முன்வைத்தனர். அதன் பிரதிகளை மத்திய கல்வி அமைச்சரிடமும், மத்திய கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடமும் கையளித்திருந்தனர்.
அதனை முழுமையாக ஆராய்ந்த கல்வி இராஜாங்க அமைச்சர் வடக்கிற்கென தனியான வட.மாகாண கல்வி அமைச்சு தேவை என்பதனை ஆளுநரிடம் எழுத்து மூலமாக வலியுறுத்தியுள்ளார். அதன் பிரதியை சங்கத்திற்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இதனை வடக்கு மாகாணத்தின் ஆளுநர் சுரேன் ராகவன் விரைந்து செயற்படுத்தி வடக்கு மாகாணத்தின் கல்வியை புதிய பாதைக்கு இட்டுச்செல்வார் என நம்புவதாக பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment