குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய அரச அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் – மைத்திரி தீர்மானம்!
ஈஸ்டர் தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய அரச அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து அரச அதிகாரிகளுக்கு எதிராகவும் வழக்குத் தொடர்வதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடாத்துவதற்கு நியமித்திருந்த மூவர் அடங்கிய குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை ஜனாதிபதியினால், சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவினால் குற்றவாளிகள் என குறிப்பிடப்படும் அரச அதிகாரிகள் எந்த வழியிலும் தப்பிக்க முடியாது.
தாக்குதல் சம்பவம் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தமை அவர்களின் கூற்றுக்கள் மூலம் தெளிவாகின்றது.
பாதுகாப்புச் செயலாளர், புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் தங்களது கடமைகளை உரிய முறையில் செய்யவில்லை என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் அம்பலமாகியுள்ளது’ என தெரிவித்துள்ளார்.
Post a Comment