Header Ads

test

போராட்டம் தொடரும்:அரசியல் கைதிகள் ஆணித்தரம்!



அரசியல் கைதிகளிற்கான போராட்டம் தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை யாரேனும் முடக்கி வைத்துள்ளார்களாவென அரசியல் கைதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இந்தச் சந்திப்பின் போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் தெரிவிக்கையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எங்களை அண்மையில் சந்தித்துக் கலந்துரையாடிய போது எமது  விடயம்  சம்பந்தமாக சட்டமா அதிபரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். சட்டமா அதிபருடன் கலந்துரையாடும் போது கைது செய்யப்பட்ட காலங்களை அடிப்படையாக கொண்டோ,  அல்லது குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டோ எமது விடுதலை தொடர்பில் கலந்துரையாட வேண்டாம்.  எங்கள் அனைவரையும் குறுகிய காலப் புனர்வாழ்வுக்குட்படுத்தி விடுதலை செய்யுமாறும் கேட்டிருந்தோம். 

இந்த நிலையில் சட்டமா அதிபருக்கும், சுமந்திரனுக்குமிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது குற்றங்களின் தன்மையைக் கருத்திற் கொண்டு தண்டனையுடன் புனர்வாழ்வும் வழங்கப்பட்டு எங்களை விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் இணங்கியிருந்தார். இந்தத் தகவலை அப்படியே சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்தாகவும் வெளியிட்டிருந்தார். இவ்வாறான சுமந்திரனின் செயற்பாடானது அவர் சட்டமா அதிபரின் பேச்சாளராகச் செயற்படுகின்றாரா? என்ற சந்தேகத்தை எமக்குத் தோற்றுவித்துள்ளது. 

நாங்கள் தற்போது விளக்கமறியலிலேயே வைக்கப்பட்டுள்ளோம். எங்களுடைய வழக்குகள் கூட இன்னும் நடந்து முடியவில்லை.  இவ்வாறானதொரு நிலையில் "நாங்கள் பாரதூரமான குற்றவாளிகள்" என்ற முடிவுக்குச் சட்டமா அதிபர் எவ்வாறு வந்தார்? அதனை ஏற்றுக் கொண்டது போன்று சுமந்திரன் ஏன் ஊடகங்களுக்கு கருத்துக்களைக் கூறுகின்றார்?

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா பீயோன் வேலை பார்ப்பதாக விமர்சித்த சுமந்திரனுக்கு பீயோன் வேலை கூட ஒழுங்காகச் செய்யத் தெரியாது. சுமந்திரனுக்கு எங்கள் மீது உண்மையான கரிசனை இல்லை. அவர் அரசாங்கத்தின் எடுபிடியாகவே தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார். 

அதுமாத்திரமன்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இதுவரை எங்களுடைய விடுதலை தொடர்பில் வாய்திறக்காமலிருப்பது எங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. எமக்கு ஆதரவாகப் போராட்டங்களில் ஈடுபடாது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை யாராவது தடுத்துக் கொண்டிருக்கின்றார்களா? 

எங்களுடைய விடுதலைக்காகப் பொதுமக்கள், சிவில் அமைப்புக்கள் ஒன்றுதிரண்டு போராட வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் எமது விடுதலையை வலியுறுத்திப் போராடுவதற்கு முன்வர வேண்டும். 

அரசியற்கைதிகள் அனைவரும் குறுகிய காலப் புனர்வாழ்வின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதே எங்கள் கோரிக்கை. எங்கள் கோரிக்கையில் நாம் உறுதியாகவுள்ளோம். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை நாம் எமது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments