மேலுமிரு அரசியல்கைதிகளும் போராட்டத்தில் இணைவு?
அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மேலுமிரு அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர்.
மகசீன் சிறைச்சாலையிலிருந்து நேற்றிரவு அனுராதபுரம் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்ட நடராசா சபேஸ்வரன்(கிளிநொச்சி) மற்றும் அப்துல்ஹமீத் உமர்கத்தாப்(வவுனியா) ஆகியோரே இன்று காலை முதல் உணவுதவிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே யாழ்ப்பாணத்தில் நாளை திங்கட்கிழமை அரசியல் கைதிகளது விடுதலைக்காக முன்னெடுக்கப்படவுள்ள அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திற்காக பல தரப்புக்களும் ஆதரவை தெரிவித்துவருகின்றன.
பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் இணைந்து இந்தப் போராட்டத்துக்கான அழைப்பை விடுத்துள்ளன.
புதிய மாக்சிஸ லெனிசக் கட்சி,சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, காணாமல்போனோர் பெற்றோர் பாதுகாவலர் சங்கம் ஆகியன இணைந்தே மேற்படி அழைப்பை விடுத்திருந்தன.
இந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் இது தொடர்பில் தெரிவிக்கையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 10 நாட்களாகத் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவர்களில் இருவரது நிலைமை மோசமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களது உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தத் தீர்மானித்துள்ளோம்.
யாழ்ப்பாணத்தில் நாளை திங்கட்கிழமை காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறும்.
இந்தப் போராட்டத்தில் அரசியல் கட்சி, இன,மத,பிரதேச பேதமின்றி அனைத்துத் தரப்பினரையும் பங்குபெறுமாறு அழைக்கிறோமென தெரிவித்துள்ளனர்.
Post a Comment