எழுவர் விடுதலை: நாடகம் ஆடும் இந்திய அரசு?
ராஜீவ்காந்தி கொலையில் தண்டனைக்குள்ளாகி 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் எழுவரும் கொடிய குற்றவாளிகள் அவர்களை விடுவிக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத்தலைவரின் ஒப்புதல் இன்றி அவருடைய பெயரில் வெளியிடப்பட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது.
பேரறிவாளன் உள்ளிட்டோர் மீதான தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த உச்சநிதிமன்றம் எழுவர் விடுதலை தொடர்பாக மாநில அரசே முடிவெடுக்கலாம் என அறிவித்தது.அதைனைத் தொடர்ந்து 2014- பிப்ரவரி மாதம் எழுவரையும் விடுதலை செய்ய மாநில அரசு முடிவெடுத்திருப்பதாகவும், மூன்று நாட்களுக்குள் மத்திய அரசு தன் கருத்தை தெரிவிக்க வேண்டும் . இல்லை என்றால் விடுதலை செய்வோம் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
ஆனால், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றது. இந்த வழக்கில் மத்திய அரசின் அனுமதியோடுதான் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து அப்போதைய தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் 7 பேரையும் விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினார். இந்த கடிதத்திற்கு மத்திய அரசு பதில் எதனையும் எழுதவில்லை. இதனால் உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது. அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் மூன்று மாதங்களுக்குள் மத்திய அரசு தமிழக அரசின் மனுவுக்கு பதிலளிக்க வேண்டும் என்று 2018 ஜனவரியில் உத்தரவிட்டது. இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் பெயரில் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதில்,“திட்டமிட்டு மனிதத்தன்மையற்ற முறையிலும் கொடூரமான முறையிலும் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டார். ஆகவே குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது” என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் துபே என்பவரின் கையெழுத்தில் வெளியான அந்த உத்தரவு. குடியரசுத்தலைவரின் உத்தரவின் பெயரால் அவருடைய பெயரால் வெளியிடப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இக்கடிதத்தைப் படித்த வேலூர் சிறை கைது பேரறிவாளன் “எதன் அடிப்படையில் குடியரசுத்தலைவர் இந்த முடிவை எடுத்தார்?” என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி அலுவலகத்திற்கு கேள்வி அனுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த குடியரசு தலைவர் அலுவலகம் பேரறிவாளன் கேட்ட கேள்விக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பதில் அனுப்பியது. மேலும் குடியரசு தலைவர் அலுவலகம் சார்பில் பேரறிவாளனுக்கு அனுப்பப்பட்ட மற்றொரு கடிதத்தில் 7 பேரை விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதம் குடியர்சு தலைவரின் பார்வைக்கு அனுப்பப்படவே இல்லை” என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியளிக்கும் இந்த தகவல் வெளியாகி இருந்தாலும், ஜனாதிபதி பெயரில் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட போலியான இந்த உத்தரவு ஒரு பக்கம் இருந்தாலும், கடந்த 6-ஆம் தேதி நீதிபதி ரஞ்சன் கோஹாய் உள்ளிட்ட மூவர் அமர்வு வெளியிட்ட தீர்ப்பில் “ உள்துறை அமைச்சகம் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட உத்தரவு இந்த வழக்கை எந்த வகையிலும் பாதிக்காது” என்று தெரிவிக்கப்பட்டது. ஆக, ஜனாதிபதி பெயரில் போலியாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட இக்கடிதத்தை நீதிமன்றமும் பொருட்படுத்தவில்லை. ஆனால், மீண்டும் அதே உள்துறை அமைச்சகத்திற்கு எழுவர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் முடிவை அனுப்பியுள்ளார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
Post a Comment