Header Ads

test

முதலமைச்சரை முடக்க சதி:இந்திய-அமெரிக்க கூட்டு அச்சுறுத்தல்?

வடமாகாண முதலமைச்சரது புதிய அரசியல் நகர்வுகள் குறித்து நல்லாட்சி அரசு மற்றும் கூட்டமைப்பினை தாண்டி கொழும்பிலுள்ள ராஜதந்திர வட்டாரங்களிலும் பரவலாக அச்சம் நிலவிவருகின்றது. இதன் தொடர்ச்சியாக இந்திய மற்றும் அமெரிக்க தூதுவராலயங்கள் அவரிற்கு அச்சுறுத்தும் பாணியில் ஆலோசனை மிரட்டல்களை விடுத்துள்ளமை தொடர்பில் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொழும்பிலுள்ள தூதரகங்களிற்கு சந்திப்பிற்கென அண்மையில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அழைக்கப்பட்டு இத்தகைய மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

கூட்டமைப்பிற்கெதிரான மக்கள் எழுச்சி அதனை தொடர்ந்து புதிய தலைமையொன்றினை அடையாளப்படுத்த மக்கள் முற்பட்டுள்ளமை என்பவற்றின் மத்தியில் மக்கள் பேரியக்கமொன்றை கட்டியமைக்க முதலமைச்சர் முற்பட்டுள்ளார்.

இதனை தனது நாலாவது தெரிவென முதலமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் மக்களிடையே அவரது நிலைப்பாடு தொடர்பில்  வடபுலத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பெரும் வரவேற்பு தோன்றியுள்ளது.

முதலமைச்சரின் குறிப்பாக இனஅழிப்பிற்கு எதிரான குரல் மற்றும் திட்டமிட்ட நிலசுவீகரிப்பு ,பௌத்த மயமாக்கல் என்பவற்றிற்கெதிரான அம்பலப்படுத்தல்கள் நல்லாட்சி அரசிற்கும் மறுபுறம் கூட்டமைப்பிற்கும் தலையிடியை கொடுத்தே வருகின்றது.

மறுபுறம் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் மக்களிடையே தன்னெழுச்சியையும் ஒன்றிணைவையும் அது ஊக்குவித்தும் வருகின்றது.
இந்நிலையில் முதலமைச்சரிற்கு ஆதரவாக ஏற்பட்டுவரும் அலை தொடர்பில் கூட்டமைப்பு கடும்; அச்சங்கொண்டுள்ளது.இதன் தொடர்ச்சியாகவே சுமந்திரன் தரப்பின் தூண்டுதலில் முதலமைச்சர் மிரட்டப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறிப்பாக நல்லாட்சி அரசிற்கு முண்டுகொடுக்கும் இந்திய மற்றும் மேற்குல நாடுகளினையும் சந்திப்புக்களில் முதலமைச்சர் கேள்விக்குள்ளாக்கி வருவதுடன் ஊடகங்கள் முன்னதாக அம்பலப்படுத்தியும் வருகின்றார்.

இந்நிலையிலேயே அவரை கொழும்பிற்கு சந்திப்பிற்கவென அழைத்து ஆலோசனையெனும் பெயரில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் குறித்த அச்சுறுத்தல்களின் பின்னராக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை மீண்டும் ஆணித்தரமாக எடுத்துக்கூறியிருந்ததாகவும் கொழும்பு ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் முதலைமைச்சரை அச்சுறுத்தி அடிபணிய வைக்க மேற்கொண்ட இத்தரப்புக்களது முயற்சி தோல்வியடைந்திருப்பதாகவே கருத வேண்டியிருப்பதாகவும் அத்தரப்புக்கள் மேலும் தெரிவிக்கின்றன.

No comments