விஜயகலாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் விசாரணைகள் நிறைவடைந்துவிட்டன என, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவு, நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்கவிடமே, அப்பிரிவின் அதிகாரிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இதேவேளை, அவரிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலம், சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் அவ்வதிகாரிகள், நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
விஜயகலாவின் சர்ச்சைக்குரிய உரை தொடர்பில், 59 வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன என்றும் அதில், அமைச்சர்கள், இராஜாங்கள் அமைச்சர்கள்,பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய அறுவரின் வாக்குமூலங்கள் உள்ளடங்கியுள்ளது. அத்துடன், அரச அதிகாரிகள் 14 பேரின் வாக்குமூலங்களும் உள்ளடங்குகின்றன என்றும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு அவ்வதிகாரிகள் கொண்டுவந்தனர்.
அதனடிப்படையில், சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்காக, ஒக்டோபர் 19ஆம் திகதி வரைக்கும், வழக்கை கொழும்பு பிரதான நீதவான் ஒத்திவைத்தார்.
'உத்தியோகபூர்வப் பணி' ஜனாதிபதி மக்கள் சேவை - தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின், யாழ். மாவட்டத்துக்கான 8ஆவது வேலைத்திட்டம், யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஜூலை மாதம் 2 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், “தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், எப்படி இருந்தோம் என்பதை உணர்வுபூர்வமாக உணரும் நிலையில் இருக்கிறோம். இன்றுள்ள நிலையில் விடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டியதே எமது முக்கிய நோக்கம்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment