Header Ads

test

தமிழர் சனத்தொகையில் வீழ்ச்சி:க.சர்வேஸ்வரன்!


தமிழர்களின் சனத்தொகை அதிகரிப்பு விகிதம் ஆண்டு தோரும் குறைவடைந்து அபாய கட்டத்தை அடைந்திருக்கிறது. ஒரு ஆண்டில் ஒரு கல்வி வலயத்தில் ஆயிரம் மாணவர்கள் குறைவடைகின்றார்கள். நாங்கள் உடனடியாகவே எமது தமிழ் சமூகத்தின் பிள்ளைப்பிறப்பு விகிதத்ததை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் இன்னும் ஐந்து ஆண்டுகளில் நாங்கள் இலங்கையின் மூன்றாம் தர மக்களாக மாறிவிடுவோம். என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை யாழ் மத்திய கல்லூரியின் 202 ஆவது பரிசில் நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய அவர் நான் ஒரு கல்வி அமைச்சராக வடக்கு மாகாணத்தின் பல பாடசாலைகளுக்குப் போயிருக்கிறேன். எமது மாகாணத்திலே 1010 பாடசாலைகள் இருக்கின்றன. இவற்றில் 120 பாடசாலைகள் 20 இற்கும் குறைந்த மாணவர்களைக் கொண்டிருக்கின்றன. 250 பாடசாலைகள் 50 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தின் நகரத்தின் சில பாடசாலைகள்,பருத்தித்துறை நகரத்தின் சில பாடசாலைகள்,கிளிநொச்சியின் நகரத்தல் ஒரு சில பாடசாலைகள், இதேபோன்று வவுனியா,மன்னார் போன்ற நகரங்களில் உள்ள சில பாடசாலைகளைத் தவிர மிகுதி அனைத்துப்பாடசாலைகளிலுமே மாணவர் பற்றாக்குறை நிலவி வருகின்றது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் வடமராட்சி கல்வி வலயத்தில் மட்டும் முதலாம் தர மாணவர்ளின் தொகை ஆயிரம் மாணவர்களால் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு வருடத்திலே ஒரு வலயத்திலே ஆயிரம் மாணவர்கள் குறைவடைந்திருக்கிறார்கள் என்று சொன்னால் எங்களுடைய மாணவர்களின் எதிர்காலம்,எங்களுடைய இருப்பினுடைய எதிர்காலம் பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும். இலங்கையில் இடம்பெற்ற போர் ஒரு மில்லியன் தமிழ் மக்களை நாடடை விட்டு வெளியேற்றியிருக்கிறது. இதை விட போராளிகள்,பொது மக்கள் உற்பட மூன்றறை லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியோராக இருந்தாலும் சரி அல்லது கொல்லப்பட்டவர்களாக இருந்தாலும் சரி இவர்களின் வயதெல்லைகளைப் பார்ப்போமாக இருந்தால் பெரும்பாலானோர் 18 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். ஆக இந்த மக்களும் எங்களிடம் இல்லை. இவர்களின் சந்ததிகளும் எங்களிடம் இல்லை. ஆகவே நாங்கள் மூன்று நான்கு தலைமுறையை இழந்திருக்றோம்.

இப்போது இலங்கையின் சனத்தொகை பெருக்க விகிதம் முஸ்லிம்கள் ஆயிரம் பேருக்கு 8.7 பேர் அதிகரிக்கிறார்கள். சிங்களவர்கள் ஆயிரம் பேருக்கு 5.5 பேர் அதிகரிக்கிறார்கள் தமிழர்கள் 1.5 பேர் அதிகரிக்கின்றார்கள். தேசிய சராசரியை விட மிகமிக குறைவான மக்கள் தொகை அதிகரிப்பில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக எமது சனத்தொகை தொடர்பில் மீள் சிந்தனை கண்டிப்பாக எங்களுக்குத் தேவை. சிங்கள இனவாத பிக்கு ஞானசார தேரர் சிங்களவரிடத்திலே பரப்புரை செய்து வருகிறார் இங்கே சிங்கள இனம் அழிந்து கொண்டு வருகிறது. எனவே 6,7 பிள்ளைகள் பெறுங்கள் என்கிறார். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது அவரது பாதீட்டிலே சிங்கள இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் மூன்றாவது பிள்ளைப்பெற்றால் அவரது பிள்ளைக்கு ஒரு லட்சம் ரூபா வழங்கப்படும் என அறிவித்து அதனை நடைமுறையும் படுத்தினார். அந்த திட்டத்தில் இன்னும் மாற்றமில்லை. இந்த அரசாங்கமும் அதை செய்து கொண்டு தான் இருக்கிறது.


இப்போது இருக்கின்ற சனத்தொகை வளர்ச்சி வீதத்தில் எமது இனம் சென்று கொண்டிருக்குமானால் நாங்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் மூன்றாவது இனமாக சுருங்கி விடுவோம். ஆகவே பாடசாலைகளுக்கு மாணவர்கள் குறைவு என்றால் எங்களுக்கு மாற்று வழிகள் இல்லை. எல்லோரும் அதிக குழந்தைகளைப் பெற்றேயாக வேண்டும். வேறு எந்த குறுக்கு வழிகளிலும் இதற்கு தீர்வு காணமுடியாது என்றார்.

No comments