மன்னார் புதைகுழி: ஊடகவியலாளர்களிற்கு தடையில்லை?
மன்னார் புதைகுழி பகுதிகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க எந்தவிதமான தடையுமில்லையென மன்னார் நீதிபதி அறிவித்துள்ளார்.இலங்கை காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றின் அடிப்படையில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க தடைவிதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சட்டத்தரணி பா.டெனீஸ்வரன் ஊடாக நகர்வு பத்திரமொன்று ஊடகவியலாளர்களால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க எந்தவித தடையுமில்லையென நீதிபதி அறிவித்துள்ளார்.
அத்துடன் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க தடைவிதித்து வந்த காவல்துறை அதிகாரிகளிற்கும் நீதிபதி கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
இதனிடையே மன்னார் புதைகுழி தொடர்பில் கொழும்பில் உள்ள தலைமையகத்திலிருந்து வரும் அறிவுறுத்தல்களைப்பின்பற்றியே ஊடகங்களிற்கு தடை விதிக்கும்; மனுக்களை தாக்கல் செய்ததாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
இனப்படுகொலையின் பங்காளிகளாக உள்ள இலங்கை காவல்துறை, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு தொலைக்காட்சி, அச்சு மற்றும் சமூக ஊடகவியலாளர்களை புதைகுழி பகுதியில் படமாக்குதல் அல்லது ஒளிப்பதிவு செய்தல் ஆகியவற்றை தடைசெய்ய கோரி மனுவொன்றை முன்னதாக தாக்கல் செய்திருந்தது.
இதனையடுத்து மன்னார் நீதவான் டி.ஜே.பிரபாகரன் அந்த இடத்திலுள்ள அகழ்வாராய்வின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் இருந்து அனுமதியில்லாமல் தளத்தை அணுகுவதற்கு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment