Header Ads

test

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள்




தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் வ. பார்த்திபனின் கோரிக்கைக்கு அமைவாக நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள் யாழ்.மாநகர சபையினால் அமைக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்த தியாக தீபம் திலீபனின் நினைவிடம் போர்க் காலத்தில் இராணுவத்தினரால் உடைத்து அழிக்கப்பட்டு இருந்தது. அந்நிலையில் அழிக்கப்பட்ட நினைவிடத்தில் எஞ்சியுள்ள பகுதியில் கடந்த காலத்தில், திலீபனின் நினைவு தின வாரத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வந்தன.

நினைவு தினம் நிறைவடைந்த பின்னர் , நினைவிடத்தினை பாதுகாப்பது இல்லை என அதனால் அதன் புனித தன்மை இல்லாமல் போவதாகவும் குறிப்பாக நல்லூர் ஆலய மகோற்சவ காலங்களில் அவ்விடத்தில் வியாபாரத்தில் ஈடுபடுவோர் , ஆலயத்திற்கு வருவோர் நினைவிடத்தின் புனித தன்மையை பேணாது நடப்பதாக பரவலான குற்றசாட்டுக்கள் எழுந்திருந்தன.



இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் வ. பார்த்திபன் தியாகி திலீபனின் நினைவிடத்தை தூய்மையாக்கி பேணிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என யாழ் மாநகரசபை அமர்வின்போது கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் 16 ஆம் திகதி நல்லூர் ஆலய மகோற்சவம் ஆரம்ப மாக உள்ள நிலையில் திலீபனின் நினைவிடத்தின் புனித தன்மையை பேணும் நோக்குடன் மாநகர சபையினால், நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.




No comments