Header Ads

test

எம்மை சுரண்டவே படையெடுக்கின்றனர் :முதலமைச்சர் சீற்றம்!

இலங்கையின் வடபகுதியில் இடம்பெற்ற நீண்டகால யுத்தத்தின் இறுதி நாட்களில் மிகப் பெரிய அழிவுகளை சந்தித்த பிரதேசமாக இந்த முல்லைத்தீவுப் பிரதேசம் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

பல பகுதிகளில் இருந்தும் இப் பகுதிக்கு வந்து சேர்ந்த மக்களை ஒரு குறுகிய வட்டத்திற்குள் வலிந்து உள்ளே தள்ளிகொத்துக் கொத்தாக குண்டுகளை வீசியும்,இடி முழக்கம் போன்ற சப்தத்துடன் விமானக் குண்டுகளைவீசியும் மற்றும் எறிகணைத் தாக்குதல்,துப்பாக்கிச் சன்னப் பிரயோகங்கள் எனப் பல முனைத்தாக்குதல்களினூடாக சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேலான மக்கள் ஒரே நாளில் கொன்றொழிக்கப்பட்டு இரத்தம் தோய்ந்த பூமியாக இந்த முல்லைத்தீவுப் பகுதி மாற்றப்பட்டது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத மக்கள் பலர் இன்றும் நடைப்பிணங்களாக எமது கண் முன்னே உலாவருவது எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் உச்ச வரம்புச் செயல்களுள் ஒன்றாகக்கொள்ளப்படலாமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைதீவில் பால் பதனிடும் தொழிலகமொன்றை திறந்துவைத்துள்ள அவர் அங்கு உரையாற்றுகையில் போரின் வடுக்களை இன்றும் சுமந்து சென்று கொண்டிருப்பவர்கள் பலர். இந்தளவு துன்பங்களையும் தாங்கி எஞ்சியிருக்கும் எம் மக்களுக்கு ஏதாவது வகையில் உதவ வேண்டுமென மாகாண சபையும், புலம்பெயர்ந்த அமைப்புக்களும், பரோபாகாரிகளும், பணம் படைத்தவர்களும் தனியாகவும் கூட்டு முயற்சியாகவும் பல அபிவிருத்தி திட்டப் பணிகளை இப் பகுதிகளில் மேற்கொண்டுவருவது மனதிற்கு சற்று இதமளிப்பதாக இருக்கின்றது. அந்த வகையில் திரு. தவசீலன் அவர்களும் சுமார் 10 கோடி ரூபா முதலீட்டில் இந்த பால் பதனிடும் தொழிற்சாலையை ஆரம்பித்து வைத்துள்ளார்.இத் தொழிற்சாலையில் நியமனங்களைப் பெறுவதன் மூலம் நேரடிப் பயனாளிகளாக சுமார் 20 பேர் வரை பயன் பெறவுள்ளார்கள் என அறிகின்றேன்.அத்துடன் மறைமுகப் பயனாளிகளாக 200ற்கும் மேற்பட்ட பயனாளிகள் தமது பால் உற்பத்திகளை இந்த நிறுவனத்திற்கு வழங்குவதன் மூலம் பயன்பெறவுள்ளார்கள். 

வடபகுதியைப் பொறுத்த வரையில் எமது பெரும்பான்மை உற்பத்திகள் மூலப் பொருட்களாகவோ அல்லது ஆரம்ப நிலையிலோ எமது பிரதேசங்களுக்கு வெளியே தென் பகுதிக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ எடுத்துச் செல்லப்பட்டு அவற்றின் பயன்பாட்டுப் பெறுமதிகள் விருத்தி செய்யப்பட்டுமிகக் கூடிய விலையில் மீளவும் எமக்கு விற்பனை செய்யப்படுவது பல சந்தர்ப்பங்களில் உணரப்பட்டுள்ளது. சில சமயங்களில் இங்கு கொள்வனவு செய்யும் உற்பத்திப் பொருட்கள் பல நூறு மடங்கு இலாபத்தில் அரசாங்கத்தாலோ தெற்கத்தியவர்களாலோ, சர்வதேசக் கம்பனிகளாலோ விற்பனை செய்யப்படுகின்றன. உதாரணத்திற்கு இங்கு முல்லைத்தீவில் அரசாங்கம் கொக்கிளாய் பிரதேசத்தில் எமது நிலத்தில் சேர்ந்துள்ள இல்மினைட் என்ற கனிய வளத்தைப் பிரித்தெடுக்க ஆலையொன்றினை கட்ட முனைந்துள்ளது. வண்ணப்பூச்சுப் பொருளாக எமக்கு அடையாளம் காட்டப்பட்டு பேயின்ட் உருவாக்கத்திற்குப் பாவிக்கப்படப் போவதாக அது காட்டப்பட்டாலும் இல்மினைட் என்ற கனியவளம் அணு உற்பத்திப் பொருட்களுக்கு அத்தியாவசியமாக அமைகின்றது. பெயன்ட்டுக்குப் பாவிக்கப்படப் போவதாக கூறப்படும் இல்மினைட் அணு உற்பத்திக்கு ஆதாரக் கனியவளமாக கொள்வனவு செய்யப்பட்டால் எந்தளவு இலாபத்தை ஈட்டலாம்.

இன்று பல கம்பனிகளும் கூட்டு நிறுவனங்களும் எமது பகுதியில் இருக்கும் இயற்கை வளங்களைச் சுரண்டிச் செல்வதற்காகப் பல்வேறு வடிவங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் எமது பகுதிகளை நோக்கி படையெடுத்து வருகின்றார்கள். புதிய புதிய கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தல், வர்த்தக மேம்பாட்டிற்கு என்ற பெயரில் அதிகரித்த அல்லது தாழ்த்திய வட்டி வீதங்களின் கீழ் நுண்நிதிக்கடன்களை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளால் எம்மவர்களை சிறைப்படுத்தி விடுகின்றார்கள். 

எம்முட் பலர் முதலீடு, முதலீடு என்று வெளியார்களை இங்கு கொண்டுவர கங்கணங்கட்டி நிற்கின்றார்கள். அவர்கள் எப்பேர்ப்பட்டவர்கள், அவர்களின் முதலீட்டு முனைப்புக்கள் எப்பேர்ப்பட்டவை என்பவற்றைத் தூர கால நோக்குடன் நாங்கள் பரிசீலிக்கத் தவறிவிடுகின்றோம். வெளியில் இருந்து வருபவர்களுக்கு எமது மண்மேல் மதிப்பும் மாண்பும் உணர்வும் இருக்காது. எனவேதான் எமது உள்நாட்டு மக்களும் புலம்பெயர் மக்களுந்தான் வடமாகாணத்தில் முதலீடுகளை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றேன். 

இன்று வடபகுதியில் மட்டுமன்றி இலங்கையின் முழுப்பகுதிகளிலும் வெளிநாட்டு உள்நுழைவுகளும் அவற்றின் மேலாதிக்கங்களும் உணரப்பட்டு வருகின்றன. எமது பகுதிகளில் காணப்படுகின்ற கூடிய வருமானங்களை ஈட்டக்கூடிய இயற்கை வளம் மிக்க பகுதிகள், சுற்றுலாத்தளங்கள், இயற்கைத் துறைமுகங்கள், கடல்வளம், நீர்வளம், நிலவளம் என அனைத்தையுந் தமதாக்கிக் கொள்ள கழுகுகள் போன்று பல சக்திகள் உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் எம்மைச் சுற்றிப் பறந்த வண்ணம் உள்ளன. 

எம்மை அடக்கி ஆள வேண்டும் என்று இன்று எண்ணுகின்ற பெரும்பான்மைச்சமூகத்தினர் மிக விரைவில் எம்மையும் தமது சகோதரர்களாக அணைத்துக் கொண்டு வெளிநாட்டுச் சக்திகளிடமிருந்து இலங்கையையும் அதன் உள்ளக வளங்களையும் பாதுகாப்பதற்குச் சேர்ந்து போராட வேண்டிய ஒருசூழ்நிலை ஏற்படப்போகின்றது என்பதை உணர்கின்றேன்.தெற்கில் 15000 ஏக்கர் காணி பிறிதொரு நாட்டுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துள்ளமை உங்கள் அனைவருக்குந் தெரியும். அதனால் தான் நான் இப்போதிருந்தே எமது நிலங்கள் பாதுகாக்கப்படல் வேண்டும்,எமது விவசாய முயற்சிகள் தடைகளின்றி மேற்கொள்ளப்படல் வேண்டும், கடல் வளங்கள் ஏனையவர்களின் சுரண்டுகைகளுக்கு உட்படாது பாதுகாக்கப்படல் வேண்டும், எமது சுற்றுலா மையங்கள்  வட மாகாண சபையின் நேரடிக் கண்காணிப்பில் விருத்தி செய்யப்படல் வேண்டும், இவைகளின் மூலம் கிடைக்கப் பெறுகின்ற நிதிகள் எமது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு பயன்பட வேண்டுமென மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்து வருகின்றேன்.
ஆனால் அன்றன்றைக்குத் தமக்கு அனுசரணைகள் கிடைத்தால்ப் போதும் என்று எண்ணும் எம்மவர்கள் தூரநோக்கற்று எம்மைத் தூ~pத்து வருகின்றார்கள். எமது பௌதீகப் பலம் எமது இயற்கைச் சூழலே. அது பறிபோய்விட்டால் நாம் வீழ்ந்து விடுவோம். இதை நாம் மனதில் ஆழமாய்ப் பதித்து வைத்திருக்க வேண்டும். எமது சிந்தனைகளைச் சில்லறைகளில் சிக்க வைத்து சீரிய ஒரு எதிர்காலத்தை வேற்றார் மழுங்கடிக்க விடாமல் நாம் பார்த்துக் கொள்வோம்.

தமிழர்கள் இந்த நாட்டின் பூர்வீகக்குடிகள். இப் பகுதிகளில் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே திராவிடர்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் ஆதாரங்களும், அடையாளங்களும் ஆராய்ச்சிகளின் மூலம் இன்று வெளிக்கொணரப்பட்டுள்ளன.இது காறும் பெரும்பான்மை மக்கள் கூறிவந்த வரலாற்று உண்மைகள் இன்று மீள் பரிசீலனைக்கு ஆளாக்கப்பட வேண்டியுள்ளது. 

இன்றைய இளைய சமுதாயத்தைக் குறுக்கு வழிகளில் சென்று தீய பழக்கங்களைப் பழகிக் கொள்ளவும்கொலை, களவு, பாலியல் சே~;டைகள், மதுபாவனை, கூரிய ஆயுதங்களுடனான அடாவடித்தனங்கள் போன்றவற்றைப் புரியவுந் தூண்டுகின்ற தீய சக்திகளிடமிருந்து எமது இளைய சமுதாயம் பாதுகாக்கப்பட வேண்டும். கல்வியறிவில் சிறந்தவர்களாக, இந்த நாட்டின் எதிர்காலத் தலைவர்களாக, புத்தி ஜீவிகளாக அவர்களை மாற்ற நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது. இதற்கு பெற்றோர்களின் பங்கு மிகமிக அத்தியாவசியம்.நாங்கள் சேர்ந்தே எமது வருங்காலச் சந்ததியினரைப் பார் போற்றும் சமூகத்தவர்களாக மாற்ற எத்தனிப்போமாக! இன்றைய இந்தப் பால் பதனிடும் தொழிற்சாலை மென்மேலும் வளர்ச்சி பெற்று அதன் உற்பத்திகளைப் பன்மடங்கு அதிகரிப்பதனூடாக ஊட்டச்சத்து மிக்க குழந்தைகளை இப்பகுதிகளில் உருவாக்குவதற்குப் பாடுபடவேண்டுமென முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments