Video Of Day

Breaking News

நிலக்சனின் 11வது நினைவேந்தல் யாழில்!


ஆயுததாரிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளன்  சகாதேவன் நிலக்சனின் 11 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று பிற்பகல் யாழ் பிரதான வீதியிலுள்ள படுகொலையான ஊடகவியலாளர்களது நினைவுத்தூபியில் நடைபெற்றிருந்தது.

மூத்த ஊடகச்செயற்பாட்டாளர் இரத்தினம் தயாபரன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நினைவுதூபிக்கு நிலக்சனின் தாய்,தந்தை மற்றும் சகோதரன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

அங்கு கருத்து தெரிவித்த நிலக்சனின் தந்தையார் தான் மகனின் படுகொலைக்கு நீதி கிடைக்குமென்ற நம்பிக்கையை முற்றாக இழந்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.

அங்கு உரையாற்றிய ஊடக செயற்பாட்டாளர்கள் நல்லாட்சி அரசென சொல்லிக்கொள்ளும் மைத்திரி –ரணில் அரசு ஊடகப்படுகொலைகள் தொடர்பில் தொடர்ந்தும் கள்ள மௌனம் சாதித்துக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரால் யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவரும் ஊடக மாணவனுமான சகாதேவன் நிலக்சன் (வயது 24) இனில் 2007ம் ஆண்டின் இதே நாளில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

கொக்குவிலிலுள்ள உள்ள சகாதேவன் நிலக்சனின் வீட்டுக்குச் சென்ற துணை இராணுவக்குழுவினர் அதிகாலை 5 மணியளவில் அவரை சுட்டுப் படுகொலை செய்திருந்தனர்.சிறிலங்கா இராணுவத்தினரின் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்பட்டிருந்த நேரத்தில் இப்படுகொலைச் சம்பவம் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments