Header Ads

test

ஆஸ்திரேலியா தடுப்பு முகாமில் உள்ள அகதிகள் கனடா செல்ல வாய்ப்புள்ளதா?

 ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து 1250 அகதிகளை அமெரிக்காவில் மீள்குடியமர்த்தும் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தாலும், நடைமுறையில் அமெரிக்கா தடை விதித்துள்ள 5 முஸ்லீம் நாடுகளின் அகதிகள் நிராகரிக்கப்பட்டு வருகின்றனர். அப்படி அமெரிக்கா நிராகரிக்கும் அகதிகளை கனடா எடுத்து கொள்ள அந்நாட்டு அரசிடம் கோர வேண்டும் என அகதிகள் நல வழக்கறிஞர் பென் லொமாய் தெரிவித்துள்ளார்.

ஏனெனில், மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள தடுப்பு முகாம்களில் இந்த 5 முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்த அகதிகளே பெருமளவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அகதிகளை வரவேற்கும் வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது கருத்துகளை வெளியிட்டு வந்ததை சுட்டிக்காட்டும் வழக்கறிஞர் லொமாய், “ஆஸ்திரேலியா மற்றும் பப்பு நியூ கினியா அரசாங்கம் கனடாவிடம் பேசி அவர்கள் அந்த அகதிகளை எடுத்து கொள்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். தீவு நாடான பப்பு நியூ கினியாவிலேயே ஆஸ்திரேலியா நிர்வகிக்கும் தடுப்பு முகாம்கள் அமைந்துள்ளன.

கடந்த ஜூன் மாதம் மனுஸ்தீவில் உள்ள தடுப்பு முகாமை பார்வையிட்ட ஐ.நா. அகதிகள் அமைப்பு, மீள்குடியமர்த்துவதில் உள்ள சிக்கல் அகதிகளை ஆபத்தான நிலையில் வைத்திருப்பதாக கவலை தெரிவித்திருந்தது.

சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக இத்தடுப்பு முகாம்களில் உள்ள பல நாட்டு அகதிகள், படகு வழியாக தஞ்சம் அடைந்ததால் ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்து வருகின்றது. இதன் தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு இறுதியில் அமெரிக்கா- ஆஸ்திரேலியா இடையே அகதிகளை மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, சுமார் 300 அகதிகள் மீள்குடியமர்த்தப்பட்டிருந்தாலும் சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட அகதிகள் இன்னும் நிர்கதியான நிலையில் தவித்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் 150 அகதிகளை ஏற்றுக்கொள்வதாக 2015ம் ஆண்டு முதல் நியூசிலாந்து அரசு தெரிவித்து வந்தாலும், நியூசிலாந்தில் குடியமர்த்துவது ஆட்கடத்தல்காரர்களுக்கு வசதியான முடிவாக மாறிவிடும் அல்லது அமெரிக்காவுடனான ஒப்பந்தம் முழுமை பெற்ற பிறகே வேறொரு ஒப்பந்தம் குறித்து சிந்திக்க முடியும் என ஆஸ்திரேலிய அரசு மறுத்து வருகின்றது.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அரசு கனடாவிடம் கோருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது என கருதுப்படுகின்றது. 

No comments