காலியிலிருந்து அம்பாந்தோட்டைக்கு செல்கிறது கடற்படை!
சிறிலங்கா கடற்படையின் தென்பிராந்திய தலைமையகம், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு இடம் மாற்றப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலகம் அறிவித்துள்ளது.
“அம்பாந்தோட்டை துறைமுகத்தை எந்தவொரு இராணுவத் தேவைக்கும் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று சீனத் தலைவர்களுடனான பேச்சுக்களின் போது, சிறிலங்கா பிரதமர் தெளிவாக கூறியுள்ளார்.
சிறிலங்கா கடற்படை, அதன் தென்பிராந்திய தலைமையகத்தை அம்பாந்தோட்டைக்கு மாற்றுகிறது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு சிறிலங்கா கடற்படையிடமே இருக்கும். துறைமுகத்தின் பாதுகாப்புக் குறித்து அச்சம் கொள்ள வேண்டியதில்லை.
அம்பாந்தோட்டையை இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று சீனாவுக்கு சிறிலங்கா கூறியுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகம் வணிகத் தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்தப்படும். ” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும், காலி துறைமுகத்தில் உள்ள சிறிலங்கா கடற்படையின் தென் பிராந்திய தலைமையகம் எப்போது அம்பாந்தோட்டைக்கு மாற்றப்படும் என்று இந்த அறிக்கையில் கூறப்படவில்லை.
Post a Comment