Header Ads

test

என்னிடம் கைத்துப்பாக்கியல்ல: சொட்கண் கூட இல்லை!


என்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிகளும் இல்லை. மக்கள் என்மீது கொண்டிருக்கின்ற அன்பினை ஜீரணிக்க முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்களே பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார்களென வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

மக்கள் சேவைக்காக அரசியலுக்குள் பிரவேசித்த ஒருவராகவே நான் இருக்கின்றேன். நாங்கள் உயிரை துச்சமென கருதி முடிவெடுத்தவர்கள். எமது வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அரசியலுக்கு வரவில்லை. என்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிகளும் இல்லை. மக்கள் என்மீது கொண்டிருக்கின்ற அன்பினை ஜீரணிக்க முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்களே பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள் எனவும் அனந்தி சசிதரன்   தெரிவித்துள்ளார். 

தமிழ் தேசியம் பேசி இராணுவத்தையும் , அரசாங்கத்தையும் விமர்சித்து வரும்   வடமாகாண பெண் அமைச்சர் பாதுகாப்பு அமைச்சிடம் சென்று தனக்கு பாதுகாப்பு இல்லை என கூறி , தனது பாதுகாப்புக்கு என கைத்துப்பாக்கி ஒன்றினை பெற்றுக்கொண்டு உள்ளதாக வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மீன் தெரிவித்திருந்தார்.வடமாகாண சபையின் விசேட அமர்வு இன்றைய தினம்  திங்கட்கிழமை வடமாகாண பேரவை செயலகத்தில் நடைபெற்ற வேளை அவர் இத்தகவலை தெரிவித்திருந்தார்.
நான் அரசியலில் பிரவேசித்த காலம் முதல் எனது பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றமையை உலகம் அறியும். எனக்கு உரிய பாதுகாப்பு வழங்குங்கள் என்று உரிய தரப்பினரிடத்தில் நான் கோரிக்கைகளை முன்வைத்திருந்தேன். ஆனால் அந்தப் பாதுகாப்பினை நான் முழுமையாக நம்பியிருக்கவில்லை. எனது கைகளும், எனது உறவுகளும் தான் எனக்கு பாதுகாப்பு என்பதில் அதீத நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒருவருக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பினை வழங்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பாகும். தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எனது செயற்பாடுகளை முடக்குவதற்காக பெண் என்று கூட பாராது சில நபர்கள் எத்தகைய நிலைக்கும் செல்லக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். இத்தகைய அச்சுறுத்தல்களால் தான் நான் பாதுகாப்பினை    அதிகரிக்குமாறு கோர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.

அதனைவிடுத்து பாதுகாப்பு அமைச்சிடம் கைத்துப்பாக்கியை பெற்றுக்கொண்டு வடக்கில் மேன்மைத் தன்மையை காட்ட வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. அவ்வாறான துப்பாக்கி எதனையும் நான் இதுவரையில் பெற்றுக்கொள்ளவும் இல்லை. நான் துப்பாக்கியை பெற்றுக்கொண்டதாக கூறுபவர்கள் அதனை மக்கள் முன்னிலையில் நிருபித்துக் காட்ட வேண்டும். 

எமது தாயகத்திலிருந்து இராணுவம் வெளியேறவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

இவர்கள் தமிழ்த் தேசியவாதிகளாக நடித்துக்கொண்டு அநியாய சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றால் போல செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்களெனவும் அனந்தி தெரிவித்துள்ளார். 

No comments