இலங்கை

சிறிலங்கா கடற்படைக்கு போர்க்கப்பல் - சீனா அன்பளிப்பு


சிறிலங்காவுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்தவுள்ளதாகவும், சிறிலங்கா கடற்படைக்கு போர்க்கப்பல் ஒன்றை கொடையாக வழங்கவுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 91 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கொழும்பில் உள்ள ஷங்ரி லா விடுதியில் நேற்று நடந்த நிகழ்வில், சீனத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சூ ஜியான்வெய் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய சீனத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சூ ஜியான்வெய்,

“இந்த ஆண்டு சிறிலங்காவின் முப்படையினருக்கும் சீனா, பல்வேறு பயிற்சிநெறிகளையும் தொடர்ந்து வழங்கியது.

சிறிலங்கா இராணுவ பயிற்சி அகடமியில் சீனாவின் உதவியுடன் அரங்க வளாகம் கட்டப்பட்டு வருகிறது. சிறிலங்கா கடற்படைக்கு போர்க்கப்பல் ஒன்று கொடையாக வழங்கப்படவுள்ளது.

பரஸ்பரம்  மூலோபாய  நம்பிக்கையை வலுப்படுத்த சீனா விரும்புகிறது.

முக்கியமான நலன்கள் சார்ந்த பிரச்சினைகளின் போது இரண்டு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று தொடர்ந்து ஆதரவுடன் செயற்படுவதைக் காண சீனா அக்கறை கொண்டுள்ளது.

இரண்டு நாடுகள் மற்றும் இராணுவங்களுக்கு இடையில்,  நடைமுறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, அணை மற்றும் சாலைத் திட்டத்தின் அபிவிருத்தியைப் பலப்படுத்த சீனா விருப்பம் கொண்டுள்ளது என்றார்.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment