Header Ads

test

டெனீஸ் விவகாரம் - உச்சநீதிமன்றில் விக்கி மனுத்தாக்கல்


வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் தொடுத்திருந்த வழக்கில், மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவுக்கு எதிராக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தம்மை முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவியில் இருந்து நீக்கியது செல்லுபடியற்றது என்று அறிவிக்கக் கோரி, வட மாகாண அமைச்சராக இருந்த டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதியரசர்கள் விக்ரமசிங்க, ஜனக டி சில்வா ஆகியோரைக் கொண்ட அமர்வு -கடந்தவாரம் வழங்கிய இடைக்கால உத்தரவில், டெனீஸ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உத்தரவு செல்லுபடியற்றது என்றும், அவர் தொடர்ந்தும் அமைச்சராகவே இருப்பதாக கருதப்படுகிறார் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, உங்களுடன், அமைச்சர்கள் வாரியத்தில் உள்ள அமைச்சர்கள் ஐவரும் யார் என்று எழுத்து மூலம் அறிவிக்குமாறு வட மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

இதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் இன்னமும் பதிலளிக்கவில்லை.

இந்தநிலையிலேயே, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராக, முதலமைச்சர் தரப்பில் மனுவொன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கின் விசாரணை நாளை மீண்டும் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

No comments