திருட்டுக் குற்றவாளி விஜயகாந்தின் மாநகர உறுப்பினர் பதவி அவரது மனைவிக்கு !
யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் சுந்தர்சிங் விஜயகாந்தின் பதவி தானாக செயலிழந்த நிலையில் அந்த இடத்துக்கு அவரது துணைவி நர்மதா ஜெகதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அரச அச்சகத் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் சுந்தர்சிங் விஜயகாந்த் போட்டியிட்டார். அவரது வட்டாரத்தில் வெற்றிபெற்ற அவர் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். எனினும் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினராக விஜயகாந்த் பதவி ஏற்க முன்னரே திருட்டுக் குற்றத்தில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தண்டனைக் கைதியானார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் இருந்தவாறே யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினராக அவர் சத்தியப்பிரமாணம் செய்தார். மாநகர சபை அமர்வில் பங்கேற்க அனுமதியளிக்குமாறு விஜயகாந்த் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சிடம் கோரியிருந்தார். எனினும் அதற்கான அனுமதியை அமைச்சு வழங்கவில்லை. தனக்கு எதிரான குற்றத்தீர்ப்பை ஆட்சேபித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் விஜயகாந்த் மேன்முறையீடு செய்த போதும் அவருக்கு நீதிவான் நீதிமன்றால் பிணை வழங்கப்படவில்லை.
இதனால் யாழ்ப்பாண மாநகர சபையின் 3 அமர்வுகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்க தவறிய சுந்தர்சிங் விஜயகாந்த்தின் உறுப்புரிமை தானாகவே செயலிழந்தது. அந்த இடத்துக்கு தனது துணைவியான நர்மதா ஜெகதீஸ்வரனை நியமிக்க விஜயகாந்த் கோரியிருந்தார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் சங்கையா தெரிவித்திருந்தார். அதற்கு கட்சி அனுமதியளித்தது எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய உறுப்பினராக நர்மதா ஜெகதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
Post a Comment