Header Ads

test

ந.கிருஷ்ணசிங்கம் எழுதிய கறுப்பு யூலையில் ஒரு சிறுகதை ''அந்த, மனித மிருகங்கள்...''

இவ்வளவு காலமும் டென்மாக்கிலை இருக்கிறம். இந்த மிருகச்சரனாலயத்தை வந்துபாக்காமல் இருந்திட்டம். அப்பப்பா எந்தப்பெரிய இடம். எவ்வளவு தொகையான மிருகங்கள் இங்கே இருக்குதுகள்.

யானைகள், மானுகள், மலைமாடுகள், மரையினங்கள், காண்டாமிருகங்கள், ஒட்டகச்சிவிங்கியள், வரிக்குதிரையள், ஒட்டகங்கள்.. குரங்குகளிலை எத்தினைவகை, எந்தப்பெரிய கொரிலாக்கள்.. முதளைகள்.. பாம்புகள், தீக்கோழி, மயில்கள் இன்னும் அது இதெண்டு இந்த உலகத்து எல்லாமிருகங்களையும்.. பறவையளையும் பக்கத்திலைநிண்டு பாத்தபடி நடந்துபோனம். அதுகளோ தங்கடைபாடு. என்னமாதிரி இத்தனை வகையான மிருகங்களையும் மனிசரைக்கண்டுமிரளாது, அதுகளைப் பழக்கிவைச்சிருக்கீனம். என்னைமீறிய ஆச்சரியத்திலை இப்படியெல்லாம் உரத்துச் சொல்லிக்கொண்டே நடந்துபோனன்.

ஓமப்பா! அதுகளுக்குத் தேவையான அளவுக்குச் சாப்பாடுகள், தண்ணிவென்னியெண்டு, எல்லாத்தையும் ஒருகுறையும் இல்லாமற்குடுத்து வளக்கீனம்;. பிறகெதுக்கு அதுகள் மனிசரைக்கண்டு கடிச்சுப் பிடுங்கப்போகுதுகள். சரி இனி நாங்கள் சிங்கங்களைப் றுபாக்கப்போறம். காறிலைபோய் ஏறுவோம் நடவுங்க. 

என்னப்பா! சிங்கங்களும் இதுகளைப்போலை வெளியிலை உலாவித்திரியுமோ இல்லாட்டிக் கூட்டுக்கை அடைபட்டுநிக்குமோ.. என்ரை கேள்வியைக் கேட்டுச் சிரித்தவர்,

அதுகளும் இப்பிடித்தானப்பா! சும்மா தம்பாட்டுக்குத் திரியுங்கள். சிங்கங்கள் பொல்லாத மிருகங்களல்லோ.. நாங்கள் காறுக்குள்ளை இருந்துகொண்டுதான் அதுகளைப் பாக்கவேணும்.

ஒண்டும் செய்யாதுகளே? மிரண்டபடிகேட்ட என்னைப்பார்த்து, அவரும், பிள்ளையளும் வாய்விட்டுச்சிரிச்சுக் கேலிசெய்தனர். கார்கிழம்பி சிங்கங்கள் சீவிக்கிற அந்தக் காட்டுப்பகுதியைநோக்கி ஓடியது.

அங்கே போய்ச்சேர்ந்ததும், எங்கடை சொந்தவிலாசம்.. இங்குவந்தவர்களின் பெயர், வயது எண்டெல்லாம் விபரங்கள்கேட்டுப் பதிவுகளைசெய்து, ஏதோ கொலைக்களத்துக்கை போறதுபோலை அடுக்குகளை அவர்கள் செய்யவே, என்னைப்பயம் இறுகப்பற்றிக்கொண்டது.

அங்கேயுள்ள நுளைவாயிற் கதவுகளைக் காவலர்கள் திறந்துவிடவே, கார்போய் மரங்கள் அடர்ந்த அந்த றோட்டாலை மெல்லமாய் நகரவே, என்ரை இருதயம் அடிக்கிற சப்த்தம் பெரிசாக்கேட்டுது. தலையை அங்கையுமிங்கையும் திருப்பிப் பார்த்துக்கொண்டுபோனன்,

அந்தா.. சிங்கங்கள்! எண்றபடி, பிள்ளைகள் தம்முடைய ஐபோணையெடுத்து, பூட்டிய கதவுயன்னற் கண்ணாடிக்குள்லாலை பிடிச்சுக்கொண்டு, சிங்கங்களைப் படமெடுக்கத் துவங்கினார்கள்.

றோட்டின்ரை இடதுகரையிலை குவியலாய் ஒரு பத்துக்குமேலை சிங்கங்கள் படுத்துக்கிடக்கப் பயத்தாலை என்ரை நெஞ்சுமுட்டி மூச்சுவிடத் திணறினன். எந்தப்பெரிய உருவங்கள்! ஆனாலும், அதுகள் சினக்காமல் எல்லாமாச்சேந்து எங்களையே பாக்கவே…

அப்பா! என்னப்பா எல்லாம் பொம்பிளைச் சிங்கங்களாக்கிடக்கு. ஆண் சிங்கங்கள் இல்லையோ?  சடையளோடை மடகஸ்தர் படத்திலை பாத்தோமே! அதுபோலை ஒண்டையும்காணம்.

என்று, பிள்ளைகள் தமது ஏமாற்றத்தைத் தெரிவிக்கவே, அந்தாபார்! அந்தப் பள்ளத்துக்கை கிடக்கீனம் ஆண்சிங்கங்கள்.

அவர் காட்டியதிசையில் பென்னாம்பெரிய உருப்படியள் படுத்துக்கிடந்தன.  எனக்கோ அங்கதாமதித்து நிக்கப்பயம் மேலும்அதிகரிச்சுது. எங்களுக்குப் பின்னுக்கும் கார்கள் நிக்கிறதுதெரியவே, அவரைத் துரிதப்படுத்தநினைச்சு…

இஞ்சேரும்! பின்னுக்கும் காறுகள் நிக்குதல்லோ. எடுங்க அங்காலை போய்ப்பாப்பம்! எண்டுசொல்லி, அவரின் முதுகிலை கிள்ளினன். பிள்ளையளோ அங்கை இன்னும் நிக்கவிரும்பி முணுமுணுக்கவே, அவரும் ஈடுபாடோடை, சிங்கங்களை இரசித்தபடி பார்த்துக்கொண்டு,

உவை நல்லாச் சாப்பிட்டுப்போட்டு, வலுகுசியாக்கிடக்கீனம்.
என்றுசொல்லி, அவர் சிரித்து வாய்மூடமுன்னம்.. எங்கடை காறைப்பாத்தபடி, வலுபெரிய ஆண்சிங்கமொண்டு மற்றப் பக்கத்தாலை வாறதுதெரியவே, நான் பயந்து, பெரிசாக்கத்திப்போட்டன்.

மலர்! நீர்பேசாமல் இரும். ஒண்டும் நடக்காது. அதுபோகட்டும்.

என்றுசொல்லி அவர் என்னை அடக்கினாலும், அந்தக் குரலில் பயம்தெரிஞ்சுது. பிள்ளையளும் நல்லாப் பயந்திட்டினம். என்ன நடக்கப்போகுதோ எண்டு நான் திணறின அந்தநேரத்திலை, அங்கவந்த அந்தச்சிங்கம் எங்கடை காறைநெருங்கி முன்னாலை உராயுமாப்போலை கடந்து அங்காலை போனது. அதின்ரை தோற்றத்தையும், உசாரான நடையையும், வலுபக்கத்திலை பாத்;ததிலை பயம்மீறி என்ரை நெஞ்சுத்தண்ணி வத்திப்போச்சு. 

கடவுளே! காப்பாற்றும். என்று உரத்துச்சொல்லி மனத்தை ஆற்றிக்கொள்ளப்போன அந்தக்கணத்திலை, அந்தச்சிங்கமானது அங்கைகிடந்த பெண்சிங்கங்களுக்கு முன்னாற்போய் அமைதியாய்படுத்திட்டுது.

மலர்! நீரென்னப்பா வலுவாப்பயந்திட்டீரே? அதுவொரு பசுமாடு விலத்திக்கொண்டு போனதுபோலை! என்ன பதுமையாய்போய் தன்ரை குடும்பங்களோடைசேந்து படுத்திட்டுது. பாத்தீரே! அந்தமாதிரிப்பழக்கி இதுகளைத் திருத்திவைச்சிருக்கீனம்!

ஓமோம், இதுக்குள்ளை நிண்டதுகாணும் காறை எடுங்கபோவம். என்றபடி, அவரை ஊக்கப்படுத்திக் கிழம்பி ஓடவைத்து, வெளியாலை  கொண்டுவந்து சேத்தபிறகுதான் என்ரைபயம் என்னைவிட்டுப்போனது. 

இந்தச் சிங்கங்களையும், மற்றைய பயங்கரமான மிருகங்களையும் நேருக்குநேர் பாத்த அந்தநேரத்திலையிருந்து எங்கடை நாட்டிலை இருக்கிற மனிதமிருகங்களையும், அதுகள் எங்கடை இனத்தைப் படுத்துகிறபாடுகளையும், கொலைவெறிகொண்டு கொன்று அழிப்பதையும், வாழ்ந்த இடங்களைவிட்டு எம்மவர்களைத்  துரத்தியடிப்பதையும் என்மனத்தின் உள்ளந்தரங்கம் எடைபோட்டுப்பாற்கின்றது.
 
அப்ப எனக்கு ஐஞ்சுவயசு. கொழும்பிலையுள்ள இரத்மலானைப் பகுதியிலை தொழிலகமொன்றில் எனது அப்பா வேலைசெய்ததாலை நாங்கள், அங்கையுள்ள ஒரு ஒழுங்கைக்கை  இருக்கிற வீட்டிலை வாடகைக்குக் குடியிருந்தோம். அந்தக்காலத்திலைதான் அந்தப்பெரிய அனியாயம் அங்கை நடந்துமுடிந்தது.

அண்டைக்குக்காலமை அப்பா பரபரத்தவராய் ஓடிவந்து, அம்மாவுக்கு ஏதேதோவெல்லாம் சொல்லிப் பயந்துகொண்டு பதறியபடிநிண்டார். பேயடிச்ச முகத்தோடை அம்மா கேட்டுக்கொண்டு நிண்டா. பிறகு, என்ரை அண்ணையையும், என்னையும் அணைச்சபடியே அம்மா அழத்தொடங்கினார். அப்பா வீட்டின்ரை வாசலைத் தாண்டிப்போறதும் வாறதுமாய் அவதிப்பட்டார். எனக்கு அதுவெதுகுமே விளங்காது நானும்சேர்ந்து அழுதுகொண்டு நின்றேன்.

எண்பத்திமூண்றாம் ஆண்டில் இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான சிங்களக்காடையர்களின் தாக்குதலும், பெருமினக்கலவரமும் அண்டைக்குத்தான் ஆரம்பமாகினதெண்டது அப்போது எனக்குத்தெரியிற பருவமில்லை. பெருத்த சத்தங்களோடை சிங்களத்திலை பேசிக்கத்திக்;கொண்டு கனபேர் எங்கடை வீட்டுக்கைவந்தான்கள்... அவங்களின்ரை கைகளிலை பொல்லுகள்.. கத்திகள், வாளுகள் எண்டு ஏதேதோ ஆயுதங்கள்தெரியவே, நான் பயந்து ஓடிப்போய் எங்கடை குளிக்கிற அறையுக்கை ஓளிச்சுநிண்டன்.

அம்மா அண்ணை அப்பா எல்லாரும் பெரிசாக்கத்திற சத்தங்கள்கேட்டன. வந்தவங்களின்ரை ஓங்கியகுரல்களும் தொடர்ந்தொலித்தன. சடார்.. பிடாரெண்ட ஓசைகளும், பாத்திரங்கள் உருண்டுவிழுகின்ற அதிர்வுகளும் என்னைத் திகிலடையச்செய்யவே, நான் அங்கைகிடந்த அழுக்குத்துணிக் குவியலுக்குள்ளை நுளைஞ்சு ஒளிச்சு. என்னைமூடிக்கொண்டு குறண்டிப்போய்.. படுத்திட்டன். துண்டாய் எல்லாச்சப்தங்களும் ஓஞ்சபிறகு, மெல்லமாய் எட்டிப்பாத்தன். அவங்கள் எல்லாரும் போட்டங்கள் என்றது தெரியவே.. நான் நடுங்யபடி வெளியேறிவந்து பார்த்தன்.

அப்பா…அம்மா, அண்ணை… எல்லாம் அங்க வெட்டுப்பட்டு இரத்தவெள்ளத்திலை, ஐயோ.. துண்டுதுண்டுகளாய்க் கிடந்திச்சினம்.

நான் குழறியடிச்சு விழுந்துபுரண்டு கத்தின சத்தத்தாலை பக்கத்துவீட்டுத் தாத்தா பதுங்கிப் பயந்துகலங்கி நடுங்கியபடி ஓடிவந்து, என்னை அணைச்சுத்தூக்கி… அவற்றை வீட்டை கொண்டுபோனார்.

அந்தச் சம்பவத்தை இத்தனை வருடங்கள் கழிந்தாலும்.. இவ்வளவு காலங்கள் கடந்தாலும் என்னால் மறக்கவே முடியுதில்லை. அந்தக்கொடுமையான காட்சிகள் என்ரைமனத்திலை வந்துவந்து என்ரையுசிரை உசுப்புகின்றன. நான் என்ரை வாழ்நாளிலை அதை மறக்கமாட்டேன். நாங்கள் தமிழராய் பிறந்ததற்கு இத்தனை தண்டனையா. நான் இதுவரைக்கும் அழுதுகொட்டிய கண்ணீர் கொஞ்சமல்ல.

இன்னும் எங்கடைநாட்டிலை அந்த மனிதமிருகள் திருந்துவதாயில்லை.

No comments