Video Of Day

Breaking News

கோட்டையிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்?







யாழ்.கோட்டையை இராணுவத்திற்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படக் கூடாது என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது கோட்டையில் தங்கியுள்ள இராணுவம் முற்றாக வெளியேறுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று இணைத் தலைவரான வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா,விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது

இதன்போது இடம்பெற்ற தொல்லியல் விடயம் மீதான விவாதத்தின் போது யாழ். ஒல்லாந்தர் கோட்டையில் இராணுவத்தினருக்கு இடம் வழங்கும் விடயம் தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினர் உரிய அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கின் புனரமைப்பின் போது பாரிய இடையூறுகளை விளைவித்த தொல்லியல் திணைக்களம், தற்போது கோட்டைக்குள்ளே இராணுவ முகாம் அமைப்பதை எவ்வாறு அனுமதித்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தொல்பொருள் திணைக்களம் சார்பில் பிரசன்னமாகியிருந்த அதிகாரி, ஏற்கனவே ராணி கோட்டையில் 20ற்கு மேற்பட்ட இரணுத்தினர் தங்கியுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது ராணி கோட்டையினை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்வதால், குறித்த இரணுவத்தினர் தங்குவதற்கென சிறிய அளவான தற்காலிக கொட்டகை அமைக்கும் பணிகளே மேற்கொள்ளப்படுவதாக அதிகாரி தெரிவித்தார்.

எனினும் கோட்டையில் எவ்வித இராணுவமும் தங்குவதை நாம் அனுமதிக்க முடியாது என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்ததுடன் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் வரை பொலிஸாரை பாதுகாப்பில் ஈடுபடுத்துவதுடன் புனரமைப்பு நிறைவடைந்த பின்னர் பொலிஸாரும் வெளியேறி கோட்டை முழுமையாக தொல்லியல் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்படும் என தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதை இணைத்தலைவர்கள் ஏற்றுக்கொண்டதுடன் இவ்விடயம் தொடர்பில் மத்திய அரசிற்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

No comments