Header Ads

test

நீதி மற்றும் மறுசீரமைப்புகளின் வேகம் சிறிலங்காவில் மந்தகதி என அமெரிக்கா குற்றச்சாட்டு


சிறிலங்காவில், நீதி மற்றும் மறுசீரமைப்புகளின் வேகம் மந்தமாகவே உள்ளது என்று, சிறிலங்காவுக்கான தூதுவராக முன்மொழியப்பட்டுள்ள, அலெய்னா ரெப்லிட்ஸ்  தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பினால், சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான தூதுவராகப் பெயரிடப்பட்டுள்ள, அலெய்னா ரெப்லிட்ஸ் கடந்த ஜூன் 28ஆம் திகதி, வெளிநாட்டு உறவுகளுக்கான அமெரிக்க செனட் குழுவின் நேர்முகத் தேர்வுக்காக முன்னிலையானார்.

அப்போது  உரையாற்றிய அவர்,

‘2015இல் சிறிலங்கா வாக்காளர்கள், ஊழல், முரண்பாடு, அடக்குமுறைகளை நிராகரித்து, மறுசீரமைப்பு, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளித்தனர்.

எனினும், சிறிலங்காவில், நீதி மற்றும் மறுசீரமைப்புகளின் வேகம் மந்தமாகவே உள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள், மிகவும் வலியைத் தரக் கூடியதாக இருந்ததுடன், இனங்களுக்கிடையிலான, மதங்களுக்கிடையிலான பிளவுகளை சீரமைக்கும் பணிகள் இன்னமும் முழுமையடையவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த காலத்தில் தனது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும், நீதியை நிலைநாட்டுவது, பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள், அமைதியான, செழிப்பான எதிர்காலத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான  சிறிலங்காவின் முயற்சிகளுக்கும் அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments