Header Ads

test

மாகாணசபையின் அதிகாரங்களை சுமந்திரன் வெளிக்கொணர்ந்துள்ளார்!

சுமந்திரனின் உண்மையான காதல் தமிழ்மக்களுடன் அல்ல. கொழும்பிலுள்ள ஆட்சியாளர்களுடனேயே ஆகுமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் தான் டெனிஸ்வரன் தொடுத்துள்ள முதலமைச்சருக்கெதிரான வழக்கின் தீர்ப்பினை ஏற்றுக் கொண்டிருந்தால் எவ்வித பிரச்சினையுமில்லை எனச் சுமந்திரன் கூறியுள்ள கருத்து அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாகாணசபையிடத்தில் ஒரு அதிகாரமுமில்லை .ஆளுநரிடத்தில் தான் அனைத்து அதிகாரங்களும் காணப்படுகிறது எனவும்,முதலமைச்சர் தான் நினைத்தவாறு முடிவெடுக்க முடியாது எனவும் டெனிஸ்வரன் கூறியுள்ளார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் சிங்கள தேசியவாதத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்கி வரும் நிலையில் ஆளுநரிடத்தில் தான் அதிகாரம் காணப்படுகின்றது என்ற அடிப்படையில் சுமந்திரனுக்கு அரசியல் நடாத்துவதில் எவ்வித தயக்கமும் இருக்கப் போவதில்லை.

தமிழ்மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் எனத் தெரிவித்து கடந்த-2013 ஆம் ஆண்டில் 30 ஆசனங்களை வடமாகாண சபையில் பெற்ற நிலையில் அதில் அங்கம் வகிக்கக் கூடிய முன்னாள் அமைச்சரொருவர் வடக்கு முதலமைச்சருக்கெதிராக வழக்கொன்றை நடாத்தினார். அதுவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடைய சட்டத்தரணிகள் வாதாடி மாகாண சபையில் முதலமைச்சருக்குப் பதவி அதிகாரம் கிடையாது என்ற வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் மூலம் தீர்ப்பொன்றைப் பெற்றுள்ளனர்.

ஆனால்,முதலமைச்சர் அமைச்சர்களை நீக்குவதற்கும், அவர்களை நியமிப்பதற்கும் தனக்கு அதிகாரம் காணப்படுவதாகவும் இது தொடர்பில் மேற்கொண்டு ஆளுநர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் வாதாடுகிறார். மாகாண சபையால் தமிழ்மக்களுக்கு எந்தவொரு நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

மாகாணசபைக்குரிய தேர்தல் விரைவில் இடம்பெறவுள்ள நிலையில் இந்த உண்மைகளை மூடி மறைத்து மாகாண சபையால் பல்வேறு நன்மைகள் உண்டு எனக் காட்டிப் பல்வேறு தரப்புக்களும் செயற்பட முனைப்புக் காட்டும் சூழலே காணப்படுகின்றது.

டெனிஸ்வரன் முதலமைச்சருக்கு எதிராக நடாத்திய வழக்கின் மூலம் மாகாணசபை முறையை அம்பலப்படுத்தியுள்ளார். இந்த வழக்கின் மூலம் முதலமைச்சருக்கு நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டாலும் கடந்த-2013 ஆம் ஆண்டிலிருந்து முதலமைச்சரொரு தனிமனிதராக மாகாண சபையால் எதுவுமே செய்ய முடியாது எனத் தொடர்ச்சியாகக் கூறி வரும் நிலையில் மாகாணசபையில் எதுவுமில்லை என்பதை டெனிஸ்வரன் சட்ட ரீதியாக நிரூபித்துள்ளார்.


எனவே,தமிழ்மக்கள் இந்த யதார்த்த நிலையைச் சரியாக விளங்கிக் கொண்டு எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ் அரசியலை மாகாணசபை முறைமைக்குள் முடக்குவதைத் தவிர்க்க வேண்டுமாயின் தமிழ்மக்களின் அபிலாசைகளை நேர்மையாகப் பூர்த்தி செய்யக் கூடிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் எங்களுடன் பயணிக்கும் தரப்புக்களைப் பலப்படுத்த வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

No comments