இலங்கை மற்றும் தாய்லாந்து இடையே நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான வர்த்தக மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்த இருநாட்டு அரச தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளனர்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓ ஷா மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே இவ்விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன 2016 ஆம் ஆண்டில் தாய்லாந்திற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலேயே தாய்லாந்து பிரதமரின் இலங்கை விஜயம் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்த தாய்லாந்து பிரதமரை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வரவேற்றதுடன், இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் மரியாதை வேட்டுக்கள் முழங்க மகத்தான வரவேற்பும் அளிக்கப்பட்டது.

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ உரையாடலின் பின்னர் இருதரப்பு கலந்துரையாடல்கள் ஆரம்பமாகின.

தேரவாத பௌத்த கோட்பாட்டினால் போஷிக்கப்படும் நாடுகள் என்ற வகையில் இருநாடுகளுக்கும் இடையே காணப்படும் தொடர்புகளைப் பாராட்டிய வண்ணம் கலந்துரையாடலில் ஈடுபட்ட அரச தலைவர்கள், சகல துறைகளிலும் இந்தத் தொடர்புகளை பலப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் தற்போது குறிப்பிடத்தக்க மட்டத்திற்கு வளர்ச்சியடைந்துள்ளமை தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த தாய்லாந்து பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளில் தாய்லாந்தின் முன்னேற்றத்தைப் பாராட்டிய ஜனாதிபதி, இலங்கையும் அத் துறைகளில் முன்னேற்றம் காண்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். இதற்கு இணக்கம் தெரிவித்த தாய்லாந்து பிரதமர் அதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், தாய்லாந்தில் இலங்கை தேயிலைக்கான கேள்வியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் கண்டறியவும் நடவடிக்கை எடுப்பதாக தாய்லாந்து பிரதமர் உறுதியளித்தார்.

இரு நாடுகளினதும் பௌத்த மரபுரிமைகளை உலக நாடுகளுக்குக் கொண்டு செல்வதற்கான ஒன்றிணைந்த சுற்றுலா மேம்பாட்டுச் செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும் அரச தலைவர்கள் கவனம் செலுத்தினர்.

இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான நான்கு புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இதன்போது அரச தலைவர்களின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.

சட்ட விரோதமான ஆள்கடத்தலுக்கு எதிரான சட்ட ஏற்பாடுகளுடன் தொடர்புடைய புரிந்துணர்வு உடன்படிக்கை முதலாவதாகக் கைச்சாத்திடப்பட்டதுடன், அமைச்சர் தலதா அத்துகோரல மற்றும் தாய்லாந்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இருநாடுகளுக்கும் இடையிலான உபாய மார்க்க பொருளாதார கூட்டுமுயற்சி தொடர்பான உடன்படிக்கையில் அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் தாய்லாந்தின் பிரதி வர்த்தக அமைச்சர் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

தாய்லாந்து அரசரால் பிரபல்யப்படுத்தப்படும் அளவீட்டுப் பொருளாதார கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த பேண்தகு சமூக அபிவிருத்தி மாதிரி தொடர்பான ஒன்றிணைந்த செயற்திட்டம் பற்றிய உடன்படிக்கையும் இதன்போது கைச்சாத்திடப்பட்டது.

அதேபோன்று ஆரம்பக் கைத்தொழில் உற்பத்திகளின் பெறுமதிசேர் நடவடிக்கையுடன் தொடர்புடைய தொழினுட்பம் பற்றிய உடன்படிக்கை தாய்லாந்தின் Kasetsart பல்கலைக்கழகத்திற்கும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.










Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment