யாழ்.மாநகரசபை:காற்றில் பறந்த தீர்மானம்!
யாழ்.மாநகர சபை நிர்வாகத்தில் சத்தமின்றி இலங்கை இராணுவத்தை இணைத்துப்பயன்படுத்தும் நடவடிக்கைக்கு பல தரப்புக்களும் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தி வந்த போதும் அதனை தாண்டி படையினருடன் கூட்டிணைந்து யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் மரநடுகை நிகழ்வை நடத்தி முடித்துள்ளார்.
தூய நகர திட்டத்தை நோக்கி பயணிப்பதற்கு இராணுவ ஆளணியினை தருவதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே உறுதியளித்ததாக யாழ். மாநகர சபை மேயர் இம்மானுவேல் ஆனோல்ட் ஊடகங்களிற்கு தெரிவித்திருந்தார்.
ஆனால் இதற்கு கடுமையான எதிர்ப்பு யாழ்.மாநகரசபையின் இறுதியாக நடைபெற்றிருந்த நிகழ்வில் எழுந்திருந்த நிலையில் இராணுவத்தை மாநகரசபை நிகழ்வுகளில் இணைத்துக்கொள்வதில்லையென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
யாழில் தொடர்ந்தும் இராணுவ பிரசன்னத்தை நிலைநிறுத்த மக்களது சேவைகளில் படையினர் தொடர்புபட்டுள்ளதாக காண்பிக்க முயற்சிகள் நடந்துவருகின்றது. இந்நிலையில் அரச சிவில் நிர்வாக கட்டமைப்பினை தாண்டி இராணுவத்தை நுழைக்க முற்பட்டுள்ளமை சந்தேகத்தை தோற்றுவித்துமிருந்தது.
இந்நிலையில் இன்று பண்ணை கடற்கரையில் ஆரம்பிக்கப்பட்ட மரநடுகை திட்டம் முற்றுமுழுதாக படையினரது ஆக்கிரமிப்புடன் முன்னெடுக்கப்பட்டிருந்தது.மரங்கள் நாட்டுவதற்கான குழிகளை தோண்டியது முதல் நாட்டுவது வரை படையினரே பிரசன்னமாகியிருந்தனர்.
நிகழ்வில் மாநகர முதல்வர்,துணை முதல்வர்,யாழ்.அரச அதிபர்,மாநகர ஆணையாளர் மற்றும் கூட்டமைப்பு,ஈபிடிபி சார்பு மாநகரசபை உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.
Post a Comment