மஸ்தான் ராஜினாமா:மைத்திரி ஏற்றுக்கொண்டார்!
வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவகாரப் பிரதியமைச்சராக, கடந்த செவ்வாயன்று (12) சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட காதர் மஸ்தான், தான் வகிக்கும் இந்துமத விவகாரப் பிரதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்ட இந்து மத விவகார பிரதி அமைச்சுப் பொறுப்பினை, அவரின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை ஜனாதிபதி மீளப்பெற்றுள்ளார்.
நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை - இலங்கை அரசாங்கத்தின் ராஜாங்க அமைச்சர்களாக இருவரும், பிரதியமைச்சர்களாக ஐந்து பேரும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டனர்.
ஜனாதிபதி மைத்திரி தலைமை தாங்கும் சிறீPலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், முஸ்லிம் ஒருவரிடம் - இந்து சமய அலுவல்கள் அமைச்சின் பிரதியமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டமைக்கு எதிராக, தமிழர் சமூகத்திலிருந்து ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்பியிருந்ததோடு, அந்த நியமனத்துக்கு எதிராக சில இந்து அமைப்புக்கள் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியிருந்தன.
இதனையடுத்து, தனக்கு வழங்கப்பட்ட பிரதி அமைச்சிலிருந்து இந்து சமய அலுவல்கள் பொறுப்பினை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு, இலங்கை ஜனாதிபதியிடம் இன்று வியாழக்கிழமை மஸ்தான் வேண்டுகோள் விடுத்ததாகவும், அதற்கிணங்க அந்தப் பொறுப்பினை ஜனாதிபதி மீளப்பெற்றுக் கொண்டதாகவும் தெரியவருகின்றது.
Post a Comment