Header Ads

header ad

எழுதி வாசிப்பதால் சிலர் போல் உணற்சிவசப்பட்டு பேசுவதில்லை - சுமந்திரனுக்கு விக்கி பதிலடி


எழுதிவைத்து வாசிப்பதால் உணற்சிவசப்பட்டு பேசவும், வழ வழ என்று நிண்டநேரம் பேசவும் தேவையில்லை என தான் உரைகளை எழுதிவைத்து வாசிப்பதை கேலி செய்துவந்த சுமந்திரனுக்கு தனது இன்றய “நீதியரசர் பேசுகிறார்” நூல் வெளியீட்டு விழாவில் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் பதிலடி கொடுத்துள்ளார்.

முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் உரைகள் அடங்கிய “நீதியரசர் பேசுகிறார்” நூல் வெளியீட்டு விழா
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (24.06.2018) நடைபெற்றது. நிகழ்வில் அவர் தனது உரையில்,

“நான் எழுதி வாசித்தல் பற்றி எனது மாணவர் குறையாகக் கூறியிருந்தார் என்று கூறினேன்.
எழுதி வாசித்தலினால் ஏற்படும் நன்மைகள் பற்றி எனது பிறிதொரு நூலில் நான் கூறியுள்ளேன். அதை மீண்டும் இங்கு கூறலாம் என்று நினைக்கின்றேன்.
1. உணர்ச்சி  மேலீட்டில் கூறத்தகாதனவற்றைக் கூட்டங்களில் கூறாது விடுவதற்காக எழுதி வாசித்தல் பொருத்தமானதாகும்.
2. பிறமொழிக்கலப்பின்றிப் பேசுவதற்காக எழுதி வாசித்தல் பொருந்தும்.
3. எடுத்துக்கொள்ளப்பட்ட விடயம் பற்றிய உரிய ஆய்வுகள் முன்னமே நடந்து, பேசவேண்டிய பொருள் பற்றிய உள்ளடக்கம்  எழுத்தில் ஏற்கனவே கைவசம் இருந்ததால் கூட்டங்களின் போது மனம் அல்லலின்றி ஆறுதலாக இருக்க உதவி புரிந்தது. இது எமது வயதிற்குத் தேவையாக இருந்தது.
4. பேச்சை நேரத்துக்கேற்றவாறு கட்டுப்படுத்த ஏதுவாக அமைந்தது. எப்பொழுதும் நேரகாலத்தினுள் என் பேச்சை முடிக்க இவ் வழி உதவி புரிந்தது. வழ வழ வென்று நீண்ட நேரம் பேசிக்கொண்டு போவதை இது தடுத்தது.
5. ஏதாவது ஒரு பேச்சு அன்றுடன் அழிந்து போகவிட நான் விரும்பவில்லை. அதாவது சிந்தித்து சிரத்தையுடன் தயாரித்த பேச்சுக்களை சிதிலம் அடையவிட நான் விரும்பவில்லை. அதற்காகவும் எழுதி வாசிப்பது முறையான ஒரு நடவடிக்கையாக எனக்குப்பட்டது.

நான் நீதிமன்றச் சேவையில் சேர்ந்து சட்ட விரிவுரையாளராகத் தொடர முடியாத காலத்திலும் எப்படி எனது முன்னைய சட்டவிரிவுரைகளை மாணவ மாணவியர் பிரதிகள் எடுத்துப் பாவித்தார்களோ அதே போல் நான் போனாலும் எனது பேச்சுக்கள் யாரேனும் ஒருவருக்கு உதவி செய்யட்டுமே என்ற எண்ணத்தில் எழுதி வாசித்து வந்தேன். ஆனால் சென்ற 30, 35 வருடங்கள் தான் நான் அவ்வாறு எழுதி வைத்து வாசித்து வந்துள்ளேன். அதற்கு முன்னையவை எழுந்தமானமாகப் பேசியவையே. அவை இப்போது மறைந்து போய்விட்டன. காத்திரமான பேச்சுக்கள் என்று அப்போது கூறப்பட்ட பல பேச்சுக்கள் காற்றோடு காற்றாக கலந்து போய் விட்டன.

சிங்கள மக்களின் சரித்திரம் பல விதங்களில் கற்களில், பாறைகளில் பிரதிபலிக்கின்றன. தமிழரோ இங்கு கற்பாறைகள் இல்லாததாலோ என்னவோ தமது எண்ணங்களை, வரலாறுகளைப் பின் வருபவர்களுக்கு விட்டு வைத்துச் செல்லத் தவறி விட்டார்கள். அன்றைய நாணயங்களிலும் ஒரு சில கல்வெட்டுக்களிலுமே அவற்றை நாங்கள் காணக் கூடியதாக உள்ளன. இதனால் இதுவரை எம்மைப் பற்றிய தவறான வரலாறு தெற்கத்தையர்களால் தெரியப்படுத்தி வரப்பட்டது. அண்மைய அகழ்வாராய்ச்சிகள் தான் உண்மையைப் புலப்படுத்தியுள்ளன. வரலாறுகளுக்கு கல்வெட்டுக்களில் எழுதப்பட்டவை எவ்வளவு முக்கியமோ எமது பேச்சுக்களை எழுதி வைப்பதும் அவ்வாறான நன்மை பயப்பன என்று கொள்ளலாம். எமது அன்றைய கால சிந்தனைகளின் பிரதிபலிப்புக்களாக அவை பரிணாமம் பெறக் கூடும் என்பதே அதன் காரணம்.” - என்றார்.

No comments

Powered by Blogger.