Header Ads

test

தமிழர்களின் வரலாற்றுத் தடயங்களை உலகறியச் செய்ய முன் வரவேண்டும்! - பழ. நெடுமாறன்

தமிழர்களின் தொன்மை, இலக்கியம், வரலாறு ஆகியவற்றை உலகறியச் செய்யும் பணியை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் முன்னெடுத்துச் செல்ல முன்வரவேண்டும் என்றார் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன்.


 திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழர் வரலாற்றுத் தொன்மை கருத்தரங்க நிறைவு விழாவில் அவர் மேலும் பேசியது:

 சம்ஸ்கிருத இலக்கியத்தில் கற்பனை வளம் மிகுதி. தமிழ் இலக்கியத்தில் இயற்கைத் தன்மை அதிகம். வடமொழி இலக்கியம் எதுவாக இருந்தாலும் கற்பனை கலந்து மெய் போன்று சொல்லப்பட்டிருக்கும்.

 ஆனால், தமிழ் இலக்கியத்தில் குறிப்பாக சங்க இலக்கியத்தில் வரலாற்றுத் தடயங்கள் சான்றாக அமைந்துள்ளன. சேக்கிழாரின் பெரிய புராணத்தில் கற்பனையுடன் இணைந்து வரலாற்று உண்மையும் உள்ளது. அதற்கான கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளன.

 வரலாற்று உண்மை புராணங்களில் மட்டும் அல்ல இலக்கியத்திலும் உள்ளது. பாண்டிய அரசின் தலைமையிடமான மதுரையை பற்றி இலக்கியங்களில் காணப்படும் மதுரை எங்கே, சங்க கால மதுரை எங்கே. இன்று இருப்பது நாயக்கர் கால மதுரை. நகர்ப்புற நாகரிகம் இருந்ததற்கான அனைத்து தடயங்களையும் கீழடியில் அகழாய்வு செய்த ஆராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் வெளிக்கொண்டு வந்துள்ளார்.



 இதனால், பெருமிதத்துடன் தமிழன் நிமிர்ந்து நிற்பது மட்டுமல்ல, உலகமே வியந்து நிற்கிறது. சங்க இலக்கியங்கள் மதுரையை பற்றி பாடியது உண்மைதான் என்று கீழடி அகழாய்வு நிலைநாட்டியுள்ளது.

 புதுதில்லியில் பெரும் தமிழறிஞர்கள் கூடி நிறைவேற்றிய தீர்மானத்தின்படிதான், தமிழுக்கு என ஒரு பல்கலைக்கழகம் தஞ்சையில் தொடங்கப்பட்டது. அப்பல்கலைக்கழகம் இனி தமிழர்களின் வரலாற்றுத் தடயங்களைப் பாதுகாத்து உலகம் அறியச் செய்யும் வகையில் வரலாற்றுப்படுத்தும் திட்டத்தை தொடர வேண்டும். இதற்கு, பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் முன் வரவேண்டும். இப்பணிக்கு அனைத்து உதவிகளையும் மத்திய, மாநில அரசுகள் மட்டும் அல்லது ஐ.நா. சபை, யுனெஸ்கோ அமைப்பு ஆகியவையும் செய்ய வேண்டும் என்றார் பழ. நெடுமாறன்.

 அமைப்பின் செயலர் ந.மு. தமிழ்மணி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், கீழடி அகழாய்வு - வைகைக் கரை நாகரிகம் என்ற தலைபில் இந்தியத் தொல்லியல்துறை (அசாம்) கண்காணிப்பாளர் கி. அமர்நாத் ராமகிருஷ்ணன், அரிக்கமேடும்- தமிழக அயலகத் தொடர்புகளும் என்ற தலைப்பில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் வீ. செல்வக்குமார், அகழாய்வுகளின் அடிப்படையில் தமிழர் நாகரிகத்தின் தோற்றமும் - வளர்ச்சியும் என்ற தலைப்பில் தொல்லியல்துறை முன்னாள் உதவி இயக்குநர் தி. சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.



 கருத்தரங்கில், தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு, அமைப்பின் திருவாரூர் மாவட்டம் சார்பில், நிலைவைப்பு நிதியாக ரூ. 1.65 லட்சத்தை வரவேற்புக் குழுத் தலைவர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறனிடம் வழங்கினார்.



No comments