Header Ads

test

உதாசீனத்தை பொறுக்கமுடியாது:மைத்திரி முன் முதலமைச்சர் சீற்றம்!

வடபகுதியில் இடம்பெற்ற நீண்டகால யுத்தத்தின் விளைவாக பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் தாய் தந்தையர்களை இழந்து, உறவுகளை இழந்து, குழந்தைகள் காப்பகங்களிலும் மற்றும் குழந்தைகளைப் பராமரிக்கின்ற நல்ல உள்ள படைத்தவர்களின் தனிப்பட்ட இடங்களிலும், செஞ்சோலை போன்ற அமைப்புக்களிலும் வாழ்ந்து வருகின்றார்கள். இக் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இக்குழந்தைகள் பற்றி சிந்திக்கும் ஒரு சந்தர்ப்பம் இலங்கை ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சிக்கு வருகை தந்திருந்த மைத்திரி முன் உரையாற்றிய வடக்கு முதலமைச்சர் மாற்றுத் திறனாளிகள் பலர் மக்களிடையே ஒரு மூலையில் கிடந்து அவ்வாறே வாழ்ந்து மடிந்த காலங்கள் இன்று மலையேறிவிட்டது. இன்று அவர்கள் மாற்று வலுவுடைய பிள்ளைகளாக இனங்காணப்பட்டு அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும் அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கும் அரச பள்ளிகளும் மற்றும் தனியார் அமைப்புக்களும் முன்வந்துள்ளன. உதாரணமாக சிவபூமி போன்ற அமைப்புக்கள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன. இவர்களுக்கான உதவிகள் வழங்கப்படுவது அரசுக்குரிய தார்மீகக் கடமையாகும்.

போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் பல்வேறு விதமான துன்பங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கும் உட்பட்ட நிலையில் துன்பங்களை இதயத்தில் சுமந்தவாறு நடைப்பிணங்களாக நகர்ந்து கொண்டு இருக்கின்றார்கள். அண்மையில்கூட யுத்தகாலத்தில் எறிகணைத் தாக்குதலின் விளைவாக நுரையீரல்ப் பகுதியில் 50 கிராம் நிறையுடைய குண்டுத் துகள்களைத் தாங்கியவாறு பன்னிரெண்டு ஆண்டுகளாக நிமிர்ந்து படுக்க முடியாது முறையாகச் சுவாசிக்க முடியாமல் அல்லலுற்ற இளைஞர் ஒருவர் கொழும்பிலுள்ள பிரபல அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளிலும் சத்திரிசிகிச்சை செய்ய முடியாது எனக் கைவிட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர் வைத்திய காலாநிதி முகுந்தன் அவர்களால் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அந்த நோயாளி நலத்துடன் இருப்பதை பெருமையுடன் இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இவ்வாறு பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் உடலுறுப்புக்களை இழந்து அங்கவீனர்களாக எம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் ஏற்ற உதவித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கூறி வைக்க விரும்புகின்றேன். போரில் பாதிக்கப்பட்டு பல வித நெருக்கடிகளுக்கு உள்ளானவர்களை முன்னாள் போராளிகள் என்ற ஒரே காரணத்திற்காக புறம் தள்ளுவது மனிதாபிமானம் ஆகாது. அதுவும் சமய ரீதியிலான பண்பான குடும்ப வாழ்க்கையை வாழும் உங்களைப் போன்றவர்கள் முன்னைய போராளிகளை அவர்கள் இயக்கப் பெயர் கொண்டு புறந்தள்ளி வைப்பது எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.கௌரவ சுவாமிநாதன் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையிட்டு நாங்கள் மிகவும் மனவருத்தம் அடைந்தோம். 

இதே போன்று எமது தேவைகள் எல்லைகளின்றி நீண்டு செல்கின்றன. பல விடயங்கள் உங்களுக்குக் கூற இருந்தாலும் இரண்டு தினங்களுக்கு முன்னர் எனக்குத் தெரியப்படுத்திய ஒரு விடயத்தை இங்கு கூறுகின்றேன். விஸ்வமடுவில் தொட்டியடி என்ற இடத்தில் தாம் க~;டப்பட்டு வளர்த்த தென்னை, வாழை போன்ற மரங்களை யானைகள் வந்து அழித்துவிட்டன என்று கிராமத்தவர் வந்து முறையிட்டுள்ளார்கள். சுமார் 6 கிலோமீற்றர் தூரத்திற்கு மின்சார வேலி போட 5 மில்லியன் தேவைப்படுகின்றது. வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் அதை நிர்மாணிக்க முன்வந்துள்ளது. பணத்தை நீங்கள்தான் நல்கி உதவிபுரிய வேண்டும். இதுபற்றி நாம் பேசும் போது ஆறு உள்;ர் இளைஞர்கள் கிளிநொச்சி வனஜீவராசிகள் மருத்துவ பராமரிப்பு நிலையத்தில் தொண்டர்களாகப் பல காலமாகப் பணியாற்றி வருவதாகவும் அவர்களை உடனே நிரந்தரமாக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர் தமக்கு ஒரு காரியாலயக் கட்டடம் கட்ட விவேகானந்தா நகரில் காணி அடையாளப்படுத்தப்பட்டும் இதுவரைதந்துதவவில்லை என்றும் கூறினார்கள். இவை யாவும் தங்களால் பரிசீலிக்கப்பட வேண்டும்.

பல விடயங்கள் ஏற்கனவே தடைப்பட்டு நிற்கின்றன. நாங்கள் அவற்றை  உங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தும் நீங்கள் அவற்றை உதாசீனம் செய்வது வாடிக்கையாக நடைபெற்று வருகின்றது. எனினும் எங்கள் பிரச்சனைகளை நாட்டின் தலைவர் என்ற முறையில் உங்களுக்குக் கூறி வைப்பது எமது கடமை. இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.அக் காணிகளைத் தொடர்ந்து அவர்கள் வைத்திருக்க எந்தவித நியாயமான காரணங்களும் இல்லை. காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. இறுதியுத்தத்தில் சரணடைந்த போராளிகள், அவர்களின் தற்போதைய நிலை ஆகியன பற்றி வெளிப்படையான தகவல்கள் வழங்கப்படவில்லை. எமது மீனவர்களின் வாழ்வாதாரங்களைத் தென்னவர்கள் தட்டிப்பறிக்கின்றார்கள். அதற்கு எந்த முறையான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மேலும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமை கொண்டவர்களாக தம்மைத் தாமே நிர்வகிக்கின்ற ஒரு இனமாக வாழ அனுமதிக்க நீங்கள் முன்வரவேண்டும். அது அரசியல் ரீதியாக உங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமென்றால் ஒன்பது மாகாணங்களுக்கும் சுயாட்சி வழங்குங்கள். வேண்டுமான மாகாணங்கள் இணைந்து கொள்ள வழி விடுங்கள். சிறுபான்மை இனங்கள் தமக்குள்ளே மோதல்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற காய் நகர்த்தல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். இந்து,இஸ்லாம் மத இனத்தவர்கள் அனைவரும் வட மாகாணத்தில் சகோதரர்களாக வாழ வழிசமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் இரு குழந்தைகளும் மைத்திரியை சந்திக்க வருகை தந்திருந்த போதும் அவர்களை அவர் சந்தித்திருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments