ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியது, சிறிலங்காவுக்குச் சாதகமாக இருக்கும் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக கருத்து வெளியிட்ட போது,
”ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியிருப்பது தொடர்பாக கருத்து வெளியிடுவதற்கு, இன்னமும் காலம் உள்ளது. இது ஆரம்ப நிலை தான்.
இப்போது தான் அமெரிக்கா வெளியேறியிருக்கிறது. அடுத்து என்ன நடக்கிறது என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆனால், சிறிலங்காவுக்கு சாதகமான நிலைமையாக இருக்கக் கூடும். அழுத்தங்கள் குறையக் கூடும். நிலைமைகள் வேறுமாதிரியாக இருக்கும்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானங்களை முன்வைக்கும் முயற்சிகளை அமெரிக்கா தான் ஆரம்பித்தது.
எனவே, சிறிலங்கா தொடர்பான நல்லதொரு அனைத்துலக நிலைப்பாட்டை நாம் எதிர்பார்க்க முடியும்.
அனைத்துலக மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக முதலாவது தீர்மானம், அமெரிக்காவின் ஆதரவுடன் தான் கொண்டு வரப்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது.
அனைத்துலக மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதாக, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வாக்குறுதி அளித்தது.
அனைத்துலக சமூகத்துக்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாத நிலையில் தான், மீண்டும் இரண்டு தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.
எனவே, ஐ.நா பிரகடனங்களில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதாக கையெழுத்திட்டுள்ள சிறிலங்கா, மூன்று ஜெனிவா தீர்மானங்களையும் மதிக்கக் கடமைப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
Blogger Comment
-
Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Comments :
Post a Comment