கோத்தாவைக் காப்பாற்றும் நீதித்துறை உயர்மட்டம்?
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்படுவதில் இருந்து நீதித்துறையின் உயர்மட்டத்தினால் காப்பாற்றப்படுவதாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
மிக் போர் விமானக் கொள்வனவு மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தம்மைக் கைது செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்குத் தடை விதிக்குமாறும் கோரி, சிறிலங்காவின் உச்சநீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு 2015ஆம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கோத்தாபய ராஜபக்சவை இந்த வழக்கு முடியும் வரை கைது செய்வதற்கு, நீதியரசர் ஈவா வனசுந்தர, சிசிர ஆப்ரு ஆகியோரைக் கொண்ட அமர்வு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.
இந்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், நீதியரசர் ஈவா வனசுந்தர, இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இருந்து விலகினார்.
அதையடுத்து, ஒவ்வொரு தவணையிலும் இந்த வழக்கு விசாரிக்கப்படும் போது, நீதியரசர்களான, புவனேக அலுவிகார, பிரசன்ன ஜெயவர்த்தன ஆகியோர் விலகினர்.
கடைசியாக கடந்தவாரம், நீதியரசர் முர்து பெர்னான்டோ இந்த வழக்கில் இருந்து விலகிக் கொண்டார்.
இதனால், கோத்தாபய ராஜபக்சவின் மனு மீதான விசாரணை நொவம்பர் 27ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரிக்கும் நீதியரசர்கள் அடுத்தடுத்து விலகுவதும், வழக்கு விசாரணை நீண்ட காலத்துக்கு பிற்போடப்படுவதும், கோத்தாபய ராஜபக்சவை கைது செய்யப்படுவதில் இருந்து காப்பாற்ற உயர்மட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
Post a Comment