Header Ads

test

மீண்டும் இருண்ட யுகமா?யாழ்.ஊடக அமையம்!


யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் , பத்திரிக்கை விநியோகஸ்தருமான செல்வராசா இராஜேந்திரன் (வயது55) மீது இன்று திங்கட்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல் மீண்டுமொரு இருண்ட ஊடக யுகத்திற்கான எச்சரிக்கையோவென யாழ்.ஊடக அமையம் சந்தேகம் கொண்டுள்ளது.


பிரதேச செய்தியாளரும் , பத்திரிக்கை விநியோகஸ்தருமான செல்வராசா இராஜேந்திரன் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்ற அதேவேளை தாக்குதலாளிகளை சட்டத்தின் முன்னிறுத்தவும் யாழ்.ஊடக அமையம் கோருகின்றது.

தெற்கில் முன்னைய ஆட்சியாளர்கள் கதிரைக்கனவுடன் அலைந்து திரிய அவர்களை மீண்டும் ஆட்சி பீடமேற்றினால் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவரென தற்போதைய ஆட்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துவருகின்றனர்.ஆனால் தற்போதைய ஆட்சியாளர்களும் படுகொலையான தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் தொடர்பில் வாய் திறக்க மறுத்தேவருகின்றனர்.

கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகளை நாம் வலியுறுத்துகின்ற போதெல்லாம் தெற்கிலிருக்கின்ற அரசுகள் அனைத்துமே தொடர்ந்தும் கள்ள மௌனத்தையே சாதித்துவருகின்றன. 

யாழ்.மாநகரின் புறநகர் பகுதியான கொழும்புத்துறை துண்டி பகுதியில் இன்று திங்கள் காலை இடைமறித்த 10 பேர் கொண்ட குழு பிரதேச செய்தியாளரும் , பத்திரிக்கை விநியோகஸ்தருமான செல்வராசா இராஜேந்திரன மீது சரமாரியாக வாள்களால் வெட்டிவிட்டு தப்பித்து சென்றுள்ளது.
எனினும் தாக்குதலாளிகள் கொலை செய்யும் நோக்கிலிருக்கவில்லையென தெரியவருகின்றது.அச்சமூட்டும் வகையினிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இலங்கை பிரதமர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கின்ற நிலையில் எத்தகைய நோக்கத்திற்காக தாக்குதலை நடத்தியுள்ளனரென்ற சந்தேகம் அனைத்து மட்டங்களிலும் விரவி காணப்படுவதுடன் நிச்சயமாக மீண்டுமொரு செய்தியை தமிழ் ஊடகப்பரப்பிற்கு சொல்ல தாக்குதலாளிகள் சொல்லமுற்பட்டிருப்பதாக யாழ்.ஊடக அமையம் கருதுகின்றது.
கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவும் குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிறுத்தவும் ;நாம் சோர்ந்து போகாது தொடர்ந்தும் குரல் எழுப்பியே வருகின்றோம்.

அவ்வகையில் செல்வராசா இராஜேந்திரன் மீதான தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதலாளிகளை சட்டத்தின் முன்னிறுத்த குரல் கொடுப்போமென்பதை அறியத்தருகின்றோமென யாழ்.ஊடக அமையம் தெரிவித்துள்ளது.

No comments