Header Ads

test

இந்திய மீனவர்களால் உயிர்தப்பிய ஈழ மீனவர்கள்!

யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை கடற்றொழிலிற்கு றோளரில் சென்ற நிலையில் காணமல்போன மூவரும் இரண்டு நாட்களின் பின்பு நேற்றைய தினம் செவ்வாய்கிழமை இந்திய மீனவர்களின் உதவியால் பத்திரமாக கரை திரும்பியுள்ளனர்.


நாவாந்துரையில் இருந்து படகு மூலம் ஜோன் மைக்கல் விமல் (வயது 44) , செபமாலை அலெக்ஸ் (வயது 35) , மகேந்திரன் ரூபன் (வயது 30) ஆகியோர் கடந்த சனிக்கிழமை கடற்றொழிலுக்காக சென்றிருந்தனர்.

இவ்வாறு கடற்றொழிலிற்காகச் சென்ற நிலையில் நெடுந்தீவிற்கு அண்மைப் பகுதியில் படகின் இயந்திரத்தில் வலை சிக்கியதனால் கடலில் தத்தளிப்பதாக குடும்பத்தவர்களிற்கு நேற்று முன்தினம் தகவல் அனுப்பியுள்ளனர். இருப்பினும் அதன் பின்பு தொலைபேசியும் இயங்கவில்லை.

இந்த நிலையில் காணமல்போன மீனவர்களைத் சக மீனவர்களும் தேடி கடலிற்குச் சென்றிருந்ததோடு கடற்படையினரும் தேடுதலில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் படகு அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் கடலில் தென்பட்ட படகிடம் உதவி கோரியுள்ளனர். அவ்வாறு உதவிக்கு அழைத்த படகில் வந்த இந்திய மீனவர்கள் உணவும் இயந்திரத்தில் சிக்கிய ஊசி வலையினை அறுப்பதற்கான கத்தியும் வழங்கி உதவியுள்ளனர்.

அதன் பின்னர் இயந்திரத்தில் சிக்கிய வலைகளை அறுத்து இயந்திரத்தினை சீர் செய்து மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.

No comments