Header Ads

test

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு


கொழும்பு - வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவர் குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இவர்களை கடந்த மாதம் 24 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு நொவெம்பர் மாதம் 9 ஆம் திகதி பிற்பகல் 4.30 மணி முதல் மாலை 7 மணிவரையிலான கால பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரால் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் 27 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் கைதிகளின் தலைப்பகுதி மற்றும் நெஞ்சுப்பகுதியில் துப்பாக்கி காயங்கள் காணப்பட்டமையினால் திட்டமிடப்பட்ட செயல் என விசாரணைகளின் வாயிலாக நீதிமன்றம் கருதியது.

இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் வெலிக்டை சிறைச்சாலை ஆணையாளராக செயற்பட்டு வந்த எமில்ரஞ்சன் லமாஹேவா மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவின் காவல் துறை பரிசோதகரான ரங்கஜீவ ஆகியோர் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

துப்பாக்கி பிரயோகத்தின் போது கைதிகளை அடையாளம் காண்பித்து உதவியதாக லமாஹவா மீதும் படுகொலைக்கு உதவியதாக ரங்கஜீவ மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த குற்றங்களை இழைத்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்ட இருவருக்கு எதிராகவும் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், விளக்கமறியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments