
வடக்கில் மீண்டும் ஆயுத கலாசாரத்தை உருவாக்கி அதன் மூலமாக வடக்கு மக்களை இருட்டில் தள்ளும் முயற்சிளையே இன்று சிலர் முன்னெடுத்து வருகின்றனர். விடுதலைப்புலிகளுக்கு ஒப்பாக இராணுவத்தை குற்றம்சுமத்த இடமளிக்க முடியாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற இராணுவ நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 'மே 18 எம் அனைவருக்கும் முக்கியமான தினமாகும். அதே போல கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த தினம் எம்மால் மறக்க முடியாது. நாம் யுத்த களத்தில் செயற்படாத போதிலும் மக்களுடன் இணைந்து யுத்த வெற்றிக்காக பாடுபட்ட நபர்களில் நாமும் சிலர். எமது நாட்டு மக்களுக்கு எந்தவித அச்சமும் இன்றி தைரியமாக நடமாடவும், வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் உருவானது இன்றைய தினத்திலேயேயாகும். பல இலட்சம் தமிழ் மக்கள் சிறை பிடிக்கப்பட்டு ஆயுத முனையில் போருக்கு அனுப்பப்பட்டு தீவிரவாதிகள் என்ற முத்திரை பொறிக்கப்பட்டது. வலுக்கட்டாயமாக பொதுமக்களை போருக்கு அனுப்பியமை சர்வதேச உடன்படிக்கைக்கு அமைய போர் குற்றமாகும். அவ்வாறான யுத்த குற்றத்தை விடுதலைப்புலிகள் முன்னெடுத்தனர். எனினும் பொது மக்களின் ஜனநாயக உரிமைகளை எமது பாதுகாப்பு படையினர் பாதுகாத்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர். இன்று தமிழ் அரசியல் கைதிகள் குறித்து பலர் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர் என கூறுகின்றனர். இந்த நாட்டில் ஒரு தமிழ் அரசியல் கைதியேனும் சிறைகளில் இல்லை. 56 விடுதலைப்புலிகள் சந்தேக நபர்கள் சிறைகளில் உள்ளனர். அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்கும் அப்பால் மேலும் 9 பேர் உள்ளனர், மொத்தமாக 65 பேர் அவர்கள் குறித்து வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் பாதுகாப்பு தரப்பிலும் பல்வேறு பேர் மீது வழக்கு தொடரப்பட்டு சிறையில் உள்ளனர். இன்று சிறையில் உள்ள விடுதலைப்புலி கைதிகளுக்கு அப்பால் பல்வேறு பயங்கரவாத குற்றச் செயல்களில் ஈடுபட்ட விடுதலைப்புலிகள் எந்தவித தடைகளும் இன்றி நாட்டில் சுதந்திரமாக செயற்பட்டு வருகின்றனர். இராணுவ கைதிகளும் சிறையில் உள்ளனர். அவர்கள் எவரோ ஒரு சிலரது கட்டளைக்கு அமைய குற்றம் செய்தவர்கள். மேலும் இரண்டு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோனது. எவ்வாறு இருப்பினும் இந்த பிரச்சினையில் ஒரு பக்க நடவடிக்கைகளை எடுக்க இயலாது. நியாயம் இரண்டு பக்கமும் முன்னெடுக்கப்பட வேண்டும். வடக்கில் மீண்டும் ஆயுத மோதல் ஒன்றினை உருவாக்கி அதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் இருட்டில் தள்ள ஒரு சிறு குழுவினர் முயற்சித்து வருகின்றனர். ஆகவே இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது என்றார்.
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 Comments :
Post a Comment