Header Ads

test

எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் இன்று

எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் இன்று (08) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பிக்கப்படவுள்ளது.  இது சம்பிரதாயபூர்வ அமர்வாக இடம்பெறுவதுடன், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை ஜனாதிபதி நிகழ்த்தவுள்ளார்.
சம்பிரதாயபூர்வ அமர்வு என்பதால் முப்படையினரின் அணிவகுப்புடன் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு அழைத்து வரவுள்ளார். அரசியலமைப்புக்கு அமைய பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் அதனை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து உரையாற்றுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.
வழமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையும் ஜனாதிபதிக்கு பாராளுமன்ற வளாகத்தில் வழங்கப்படும். கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி நடைபெறவிருந்த பாராளுமன்ற அமர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் வர்த்தமானி அறிவித்தல் மூலமாக ஒத்திவைத்து 8 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
துறைசார் மேற்பார்வைக் குழு, தெரிவுக்குழு மற்றும் உயர் பதவி குழு தவிர்ந்த சகல குழுக்களும் ஜனாதிபதியின் ஒத்திவைப்புடன் கலைக்கப்படும். சகல குழுக்களுக்குமான தலைவர்கள் உறுப்பினர்கள் மீண்டும் நியமிக்கப்பட வேண்டும். கோப் மற்றும் அரச கணக்குக் குழுக்களுக்கும் இது செல்லுபடியாகும். சகல தனிநபர் பிரேரணைகள், வாய்மூல கேள்வி வினாக்கள் என்பன மீண்டும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 
இதேவேளை ஜனாதிபதியின் உரை அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த விளக்க உரையாக அமையும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இந்த உரை அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களின் அறிவிப்பாக இருக்கும். கடந்த மூன்று வருடங்களில் அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகளை உள்ளடக்கியதாக அமையும் என்றும் அமைச்சர் கூறினார்.

No comments