வலி. மேற்கில் வீதியோர வியாபாரம் தடை!
வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட வீதியோரங்களில் பொருட்களைப் பரப்பிவைத்து வியாபாரம் செய்வது நேற்று வியாழக்கிழமை முதல் தடை செய்யப்படுகின்றது என வலி.மேற்கு பிரதேச சபையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வலி.மேற்கு பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு இன்று வியாழக்கிழமை தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது நிதிக்குழு, வீடமைப்பு அபிவிருத்திக் குழு, சுகாதாரக் குழு, தொழில்நுட்பக் குழு போன்ற குழுக்கள் அமைக்கப்பட்டன. மேற்படிக் குழுக்களில் கட்சி பேதமின்றி உறுப்பினர்கள் அனைவரும் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் சார்பான பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. குறிப்பாக, சங்கானை நகரில் உள்ள புடவைக் கடைகளுக்கு முன்பாகவும் அங்குள்ள வீதி ஓரங்களிலும் உடுபுடவைகள், இலத்திரனியல் பொருட்கள் மற்றும் பல பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதனால் பெருந்தொகைப் பணத்தை முதலீடு செய்து பொருட்களைக் கொள்வனவு செய்துள்ள வர்த்தகர்கள் பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றனர் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் ரஜீவன் கருத்து முன்வைத்தார்.
மேலும், இந்தச் செயற்பாட்டால் பொதுமக்களுக்கும் இடையூறுகள் ஏற்படுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இதனால் இந்த வியாபாரத்தை தடை செய்ய வேண்டும் என அவர் கோரினார்.
இந்தக் கருத்துக்கு ஏனைய உறுப்பினர்களும் ஆதரவாகக் குரல் கொடுத்ததை அடுத்து அது ஏகமனதாகத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
Post a Comment