Header Ads

test

இலங்கை இராணுவம் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுடன், இலங்கை இராணுவம் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் மனித உரிமை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படாத 49 பேர் கொண்ட இலங்கை இராணுவக்குழு ஐ.நா அமைதிக் குழுவில் பணியாற்றுவதற்காக லெபனானுக்கு அனுப்பப்பட்டது.

இந்த விடயத்தில் மனித உரிமை ஆணைக்குழுவுடன் செய்யப்பட்ட உடன்பாட்டை இலங்கை இராணுவம் மீறிவிட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பாக ராணுவத் தளபதி கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முழுமையானதும் சுதந்திரமானதுமான விசாரணைகள் நடத்த வேண்டும் என நாம் நம்புகின்றோம் எனக் குறிப்பிட்ட இராணுவத் தளபதி, நாம் மனித உரிமை ஆணைக்குழுவின் நிபந்தனைகளுக்கு இணங்கிய போதும் நேரம் முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றது எனவும் கூறியுள்ளார்.

இப்போது நாங்கள் இக்கட்டான நிலையைச் சந்தித்துள்ளோம். மனித உரிமை ஆணைக்குழுவின் ஆய்வுகள் தொடங்கப்படும் வரையிலும் எமது படையினரை ஆய்வு செய்து வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா அமைதிப்படையில் பணியாற்ற இராணுவத்தினர் அனுப்பப்படுவதற்கு முன்னர் மனித உரிமை ஆய்வுகளை மேற்கொள்ள இலங்கை இராணுவம் முழு ஒத்துழைப்பையும் வழங்கும். எவ்வாறாயினும் இராணுவத்தினர் எந்த தவறுகளையும் செய்தவர்கள் அல்ல எனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments