இரணைதீவு சென்றார் வடக்கு கல்வி அமைச்சர்!
இரணைதீவு மக்கள் போராட்டத்திற்கு மாகாணசபையின் ஆதரவைத் தெரிவித்து கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் கலந்து கொண்டார்.
தாம் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வந்த வீடுகள் மற்றும் மீன்பிடித்தொழில், விவசாயம், கால்நடைகள் எனப் பல்வகை வாழ்வாதாரங்களுடன் இரணைதீவில் வாழ்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து விரட்டப்பட்டு முழங்காவில் பிரதேசத்தில் குடியேறி அவ்விடத்திற்கு இரணைமாதா நகர் எனப் பெயரிட்டு வாழ்ந்து வருகின்றார்கள்.
இரணைதீவு றோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலையையும் இரணைமாதா நகரில் உருவாக்கி அவர்களது பிள்ளைகள் கல்விகற்று வருகின்றார்கள். யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து கடற்படையின் ஆக்கிரமிப்பிலிருக்கும் இரணைதீவில் தமது நிலங்களில் மீள்குடியேறவேண்ட தொடர் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். அவ்வகையில் இன்று கடற்படையின் தடையை மீறி நூற்றுக்கணக்கில் தமது மண்ணில் கால்பதிக்கும் போராட்டத்தை நடாத்துகின்றனர். நாற்பது வரையான படகுகளில் 400க்கு மேற்பட்ட மக்கள் இரணைதீவுக்கு செல்லும் போராட்டத்திற்கு மாகாகணசபையின் ஆதரவை தெரிவிக்கும் வகையில் வடமாகாண கல்வி அமைச்சரும் பதில் முதலமைச்சருமாகிய கலாநிதி க.சர்வேஸ்வரன் இரணைமாதாநகர் படகுத்துறைக்குச் சென்று கலந்து கொண்டார். சங்கத் தலைவர், செயலாளர் உட்பட படகுத் துறையில் போராட்டத்திலீடுபட்டிருந்த இரணை மாதா நகர் மக்களையும் சந்தித்து தமது ஆதரவினைத் தெரிவித்தார்.
Post a Comment