Header Ads

test

நேவி சம்பத்தை தப்பிக்க வைத்தார் அட்மிரல் விஜேகுணவர்த்தன – சிஐடி குற்றச்சாட்டு

11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் முக்கிய சந்தேக நபரான நேவி சம்பத் எனப்படும், கடற்படை அதிகாரியை வெளிநாட்டுக்குத் தப்பிக்க உதவினார் என்று சிறிலங்காவின் கூட்டுப் படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு கொழும்பு பகுதியில் கடத்தப்பட்ட 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டனர். இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வரும் சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் பலரைக் கைது செய்துள்ளது.
இந்த வழக்கில் தேடப்படும் முக்கிய சந்தேக நபரான கடந்படை புலனாய்வு அதிகாரியான நேவி சம்பத் எனப்படும்,லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சி  கொழும்பில், கடற்படை நலன்புரி  பிரிவின் பணியாற்றிய வந்த போது, 2017 மார்ச் மாதத்துக்குப் பின்னர் தலைமறைவாகியுள்ளார்.
இவர் தப்பிச் செல்வதற்கு, சிறிலங்கா கடற்படைத் தளபதியாக இருந்த தற்போதைய கூட்டுப் படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உதவினார் என்று, குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளரான சானி அபேசேகர குற்றம்சாட்டியுள்ளார்.
அமைச்சர்கள், மற்றும் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
5 இலட்சம் ரூபா பணத்தையும் கொடுத்து, அதிவேக தாக்குதல் படகு ஒன்றின் மூலம் நாட்டை விட்டுத் தப்பிக்க உதவியுள்ளார் என்று சானி அபேசேகர கூறியுள்ளார்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, குற்றச்சாட்டை நிரூபித்தால் தாம் பதவி விலகத் தயார் என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இதுபற்றி ஊடகங்களிடம் மேலும் பேசுவதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான வழக்கு தொடர்பாக, விசாரித்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்,  தேடப்படும் சந்தேக நபரான லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சியிடம் விசாரணை நடத்துவதற்கு கடற்படை உயரதிகாரிகள் தடை போட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரை தம்மிடம் ஒப்படைக்குமாறு 2017 மார்ச் மாதம் இரண்டு முறை கடற்படையினரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே கடற்படை மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தினால் விரைவில் அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது

No comments