பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டதன் பின்னணியில் இரு சக்திவாய்ந்த நாடுகள் நேரடியாகவே தொடர்புபட்டிருந்தன என்று இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் 46 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் மட்டுமன்றி, பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இப்பிரேரணைக்கு எதிராக வாக்களித்தது. கூட்டரசிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இந்த விடயத்தில் ஆதரவாகவும், எதிராகவும் என இரு அணிகளாகப் பிரிந்து நின்றனர். நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டபோது மஹிந்த அணியின் கையே ஓங்கியிருந்தது. அதற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் மைத்திரி அணியிலுள்ள உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியிருந்தனர். இதற்கிடையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலரும் ரணிலுக்கு எதிராகத் திரும்பியதால் ரணிலுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மேற்குலக நாடொன்றும், பலம் பொருந்திய அயல்நாடொன்றும் கொழும்பில் அரசியல் இராஜதந்திர நடவடிக்கையில் இறங்கின. தமது தூதரகம், இராஜதந்திரிகள் ஊடாக இதற்கான வியூகம் வகுக்கப்பட்டிருந்தது. பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட மேலும் சில சிறுபான்மைக் கட்சிகளிடம் இவ்விரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுகளை நடத்தியுள்ளனர். நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டு ஆட்சிமாற்றம் ஏற்படும்பட்சத்தில் அதனால் அனைத்துலக மட்டத்தில் ஏற்படும் பாதிப்புகளை அவர்கள் எடுத்துரைத்துள்ளனர். அத்துடன், பிரதமரிடமும் தொடர்பு கொண்டு நம்பிக்கையைக் கைவிடாது காய்நகர்த்துமாறு அவர்கள் கூறியுள்ளனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்றுமுன்தினம் இரவே முக்கிய சில நாடுகளின் தூதுவர்கள் பிரதமரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். தற்போதும் பிரதமருக்கு வாழ்த்துகள் குவிகின்றன. மஹிந்த ஆட்சியை மேற்குலக நாடுகள் விரும்பவில்லை என்பதையே மேற்படி நகர்வுகள் கோடிகாட்டி நிற்கின்றன. அதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதையடுத்து பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கையில் அரசியல் ஸ்திரமற்றநிலை ஏற்பட்டது.அவ்வேளையிலும் இவ்விரு நாடுகளின் அதிகாரிகள் தலையிட்டனர் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment