தமிழை பிற மாநிலங்களில் விருப்ப மொழியாக்கக் கோரும் டுவீட்டை நீக்கினார் முதல்வர்
தமிழ் மொழியை பிற மாநிலங்களில் விருப்ப மொழியாக்குமாறு பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) காலை டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் குறித்த பதிவை அவர் தற்போது நீக்கியுள்ளார்.
ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில் ஹிந்தி கட்டாயமாக பயிற்றுவிக்கப்படும் என்ற பரிந்துரை நீக்கப்பட்டு, திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை மத்திய அரசு இணையத்தளத்தில் வெளியிட்டது. இந்தப் புதிய வரைவுத் திட்டத்திற்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.
இதையடுத்து பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி இன்று காலை வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவில், “தமிழை 3 ஆவது மொழியாக்குங்கள். பிற மாநிலங்களில் தமிழை 3 ஆவது மொழியாக பயிற்றுவிக்க வேண்டும்.
அவ்வாறு விருப்ப மொழியாக தமிழை பயிற்றுவிக்க நடவடிக்கை எடுப்பது, உலகின் சிறந்த மொழிக்கு செய்யும் சேவையாக இருக்கும்.” என அவர் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, பிரதமர் மோடியை நேரடியாக கோடிட்டு பதிவிட்டிருந்த காரணத்தால், அதை நீக்குமாறு முதல்வருக்கு ஏதேனும் அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
Post a Comment