Header Ads

test

யாழில் வீடுபுகுந்து பெற்றோல் குண்டு தாக்குதல்: தொடரும் அட்டகாசம்

யாழ்ப்பாணம் கொக்குவில் மஞ்சவனப்பதி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் பெற்றோல் குண்டை வீசியும் அங்கிருந்த பெறுமதி வாய்ந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது.
இந்தத் துணிகரத் தாக்குதல் இன்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றது. மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்றே இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் வீட்டிலிருந்த தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பெறுமதியான தளபாடங்கள் மற்றும் பொருள்கள் முற்றாகச் சேதமடைந்துள்ளன எனினும் வீட்டிலிருந்தவர்கள் தெய்வாதீனமாக தாக்குதலிருந்து தப்பித்துள்ளனர்.
இதேவேளை மானிப்பாய் செல்லமுத்து மைதானம் ஊடாக இன்று மாலை 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வாள்களுடன் பயணிப்பதை அவதானித்த பொதுமக்கள், மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, கொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து ஆவா குழு உள்ளிட்ட வன்முறையாளர்களுடன் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின்றி எந்த இடத்திலும் பேச்சு நடத்த தான் தயார் என்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கடந்த வெள்ளிக்கிழமை அழைப்புவிடுத்திருந்தார்.
அவர் அழைப்புவிடுத்து மூன்று தினங்களுக்குள் பகல்வேளை வீதியால் பயணித்த இந்த தாக்குதலை வன்முறைக் கும்பல் ஒன்று முன்னெடுத்துள்ளது.
அத்துடன், வடக்கு மாகாணத்திலிருந்து இடமாற்றம் சென்ற மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ, ஆவா குழு உள்ளிட்ட வன்முறையாளர்கள் தனது நடவடிக்கையால் திருந்தி வாழ்கின்றனர் எனவும் அதற்கு அவர்களது பெற்றோர் தனக்கு நன்றி தெரிவித்திருந்தனர் என்றும் கூறிவிட்டுச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments